நடப்பாண்டில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் என்றால் அது லியோ தான். அக்டோபர் 19ஆம் தேதி நியூ திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இதற்காக மிகப்பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யும் பணியை பட குழு திட்டமிட்டு இருக்கிறது.
லியோ திரைப்படம் தனியாக தான் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழில் லியோக்கு போட்டியாக இதுவரை எந்த படமும் களத்தில் வரவில்லை. இந்திய அளவில் சலார் திரைப்படம் செப்டம்பர் மாதம் இறுதியில் ரிலீஸ் ஆகும் நிலையில் லியோவுக்கு எந்த போட்டியும் இதுவரை வரவில்லை. ஆனால் லியோக்கு தற்போது கிரிக்கெட் மூலம் புதிய பிரச்சனை வந்திருக்கிறது.
பொதுவாக ஐபிஎல் தொடரின் போது சினிமா உலகம் பெரும் அளவில் பாதிக்கப்படும். அனைவரும் கிரிக்கெட்டை நோக்கி சென்று விடுவதால் சினிமா தியேட்டர்களில் கூட்டம் குறைவாக இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தது.
இந்த நிலையில் உலககோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்குகிறது. சரியாக இரண்டு வாரத்திற்கு பிறகு லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. அப்போது உலகக்கோப்பை கிரிக்கெட் உச்சகட்ட நிலையில் இருக்கும். சரியாக சொல்ல வேண்டுமென்றால் லியோ ரிலீஸ் ஆகும் அதே நாளில் இந்திய அணி வங்கதேசத்தை லீக் ஆட்டத்தில் எதிர்கொள்கிறது.
இதனால் அனைவரும் கிரிக்கெட்டை நோக்கிய கவனம் செலுத்துவார்கள் என்பதால் லியோ திரைப்படத்திற்கு வசூல் குறைய வாய்ப்பிருக்கிறது. இந்திய அளவிலும் தமிழகத்திலும் கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தும் என்பதால் லியோவுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்.
ஆனால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாசிட்டிவாக தான் லியோ பட குழு பார்க்கிறது. ஏனென்றால் உலகக்கோப்பை லியோ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு தொடங்குகிறது. இதனை பயன்படுத்தி நாடு தழுவிய அளவில் உலக கோப்பை மூலம் லியோவுக்கு ப்ரமோஷன் ஏற்படுத்த தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் ஹிந்தி தெலுங்கு ஆகிய மொழிகளில் லியோவுக்கு நல்ல வரவேற்பு ஏற்படும் என தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.