தமிழ் சினிமாவின் வித்தியாசமான முயற்சிகளை அடிக்கடி எடுத்து வெற்றி பெறுபவர் நடிகரும், இயக்குனருமான ஆர்.பார்த்திபன். ஒரே நபர் மட்டும் நடித்து எடுக்கப்பட்ட ஒத்த செருப்பு திரைப்படம் அண்மையில் தேசிய விருது பெற்றது. தற்போது புதிய முயற்சியாக ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுத்து ஆர்.பார்த்திபன் நடித்து இயக்கி உள்ள திரைப்படம் இரவின் நிழல். இதற்கு ஆஸ்கார் விருது வென்ற ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
இரவின் நிழல் படம் எடுக்கப்பட்ட விதமும் அதன் புதிய முயற்சியும் கவர்ந்து, இந்த படத்தில் இசை அமைக்க ஒப்புக்கொண்டதாக ஏ ஆர் ரஹ்மான் கூறினார். இந்த நிலையில் இரவின் நிழல் படம் பிரிவியூ ஷோ சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்த படத்தைப் பார்த்த விக்ரம் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , பார்த்திபனை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் .
இந்த நிலையில் படத்தைப் பார்த்த திரைப்பட வர்த்தக நிபுணர் ரமேஷ் பாலா, இரவு நிழல் திரைப்படத்திற்கு 5க்கு 4 மதிப்பெண்களை கொடுத்து பாராட்டியுள்ளார். இரவின் நிழல் திரைப்படம் தமிழ் மற்றும் இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் என்று குறிப்பிட்டுள்ள ரமேஷ் பாலா , ஒரே சாட்டில் எடுப்பதற்காக 90 நாட்களாக படக்குழு எடுத்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
படம் தொடங்கும் முன்பே படக்குழு நடத்திய ஒத்திகையை இயக்குனர் காண்பிப்பதாக ரமேஷ் பாலா குறிப்பிட்டுள்ளார் . டார்க் மூவி கதைக்களத்தில் ஏ ஆர் ரஹ்மான் மென்னிசையை சேர்த்து இருப்பதாகவும் ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார். படத்தின் கேமராமேன் ஆர்தர் வில்சன் மற்றும் ஒட்டுமொத்த குழுவும் கடுமையாக உழைத்து இருப்பது திரையில் தெரிவதாக ரமேஷ் பாலா கூறியுள்ளார். கடினமான வாழ்க்கையில் தெரியும் நம்பிக்கை ஒளி தான் இரவின் நிழல் என்று ரமேஷ் பாலா சுட்டி காட்டியுள்ளார்.
இரவின் நிழல் திரைப்படம் வரும் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சூட்டிங்கிற்கு பயன்படுத்தப்பட்ட கேமராவிற்கான வாடகை தரப்படவில்லை என்ற மனுதாரர் புகார் அளித்துள்ளார்.இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் அன்றைய தேதிதான் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்று தெரிய வரும்.