பரியேறும் பெருமாள் கர்ணன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்ததாக மாமன்னன் என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், மாமன்னன் படம் உருவாகுவதற்கு தேவர் மகன் படம் தான் காரணம் என்று கூறினார். தேவர்மகன் படத்தை பார்க்கும்போது தனக்கு ஏற்பட்ட வலி, விளைவுகளை கடக்க முடியாமல் தவித்ததாகவும், அந்த படம் தனக்கு பல மன பிறழ்வுகளை ஏற்படுத்தியது என்றும் கூறினார். ஒரு சினிமா சமூகத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என உணர்த்திய படம் தான் தேவர் மகன் என்று கூறிய மாரி செல்வராஜ், அது வெளியான நேரத்தில் நடந்ததெல்லாம் ரத்தமும் சதையுமாக இருந்ததாக வேதனைப்பட தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தேவர்மகன் திரைப்படம் சரியானதா அல்லது தவறானதா என்று சொல்லத் தெரியாமல் பெரிய வலியை கொடுத்ததாகவும் குறிப்பிட்டார். பெரிய தேவர் சின்ன தேவர் இடம் பெற்றுள்ள இந்த படத்தில் எனது அப்பா நடித்தால் எப்படி இருக்கும் என்று பலமுறை தான் சிந்தித்ததாகவும், அந்தப் படத்தில் நடித்த இசக்கி தான் இப்போதைய மாமன்னன் என்றும் கூறினார். மாரி செல்வராஜ் இந்த பேச்சால் அரங்கமே அதிர்ந்தது. அது மட்டும் இல்லாமல் தற்போது அவரது பேச்சும் இணையதளங்களில் வைரலாகி உள்ளது.
இந்நிலையில் கமலை வைத்துக் கொண்டே மாரி செல்வராஜ் தேவர் மகன் படத்தை விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து பலரும் கருத்து பதிவிட்டு வரும் நிலையில், கமல் ரசிகர்கள் மாரி செல்வராஜின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.