நடிகர் விஜய் அடுத்தகட்டமாக சினிமாவில் இருந்து முழுமையாக விலகி அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ளதாக மூன்று வாரங்களுக்கு முன்னர் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சியைத் துவங்கி முதற்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஓர் ஆண்டாகாவே தனது மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்காக பல்வேறு நல்லது செய்து வந்தார். இது மக்கள் மத்தியிலும் அரசியல் வல்லுனர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து முழு நேர மற்றும் பெரிய அளவில் மக்கள் சேவையைச் செய்ய அரசியல் அதிகாரம் தேவையெனக் கருதியே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார்.
இதற்காக இன்னும் 2 படங்களுடன் முழுமையாக சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவை தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கோட் படமும், ஒப்பந்தம் செய்துள்ள தளபதி 69 படமும் ஆகும். கோலிவுட் சாம்ராஜ்யத்தில் பெரிய இடத்தில் அமர்ந்து இருக்கும் வேளையில் தளபதி விஜய் எடுத்துள்ள இந்த முடிவு மிகவும் துணிச்சலானது.
விஜயின் அரசியல் வருகை குறித்து நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் ஹாசன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “ விஜய்யை அரசியலுக்கு வர சொன்னதும் அவர் வந்தபிறகு முதன் முதலில் வரவேற்றதும் நான் தான். ” என பெருமையாக கூறினார். மேலும் இதற்காக சினிமாவில் இருந்து விலகியது குறித்து, “ அரசியலுக்காக சினிமாவில் இருந்து விலகியுள்ளது நடிகர் விஜய்யின் தனிப்பட்ட முடிவு. ” என்றுள்ளார்.
விஜய் 2026 தேர்தலில் தான் போட்டியிட திட்டம் தீட்டியுள்ளார். கமல் ஹாசன் இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் ஒரு தொகுதியைக் கூட பெற இயலவில்லை. தற்போது விஜய் – கமல் கூட்டணி வருமா என்று சிலர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் கமல்ஹாசனோ தேர்தல் தோல்விக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டார். அதனால் கூட்டணி அமைவது கடினம் தான். பார்க்கலாம்.