ஒரு காலத்தில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கும் தலைமை இடமாக விளங்கியது தமிழ் சினிமா. ஆனால் கடந்த சில காலமாக தமிழ் சினிமாவில் இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் எந்த திரைப்படமும் அமையவில்லை.
குறிப்பாக தெலுங்கில் பாகுபலி 2, ட்ரிபிள் ஆர், கன்னடத்தில் கேஜிஎப் 2 ஆகிய திரைப்படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை படைத்திருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து அப்படி ஒரு சாதனையை எந்த நடிகர் படைக்கப் போகிறார் என்ற கேள்வி நீண்ட நாட்களாகவே இருந்தது.
இதற்கு நடிகர் விஜய்யும் லோகேஷ் கனகராஜன் இணைந்துள்ள லியோ திரைப்படம் தான் பதில் சொல்லும் என்ற ரசிகர்களும் நம்பினர். இதற்கு காரணம் நடிகர் கமல்ஹாசனை வைத்து 400 கோடி ரூபாய்க்கு மேல் விக்ரம் மூலம் லோகேஷ் கனகராஜ் சாதனை செய்தார்.
இதனால் லியோ திரைப்படமும் அப்படி ஒரு சாதனையை மேற்கொள்ளும் என்று ரசிகர்கள் நம்பினார்கள். இதனால் லியோ திரைப்படத்தை ஒரு பாண் இந்தியா திரைப்படமாகவே அனைவரும் கண்டனர். ஆனால் ரசிகர்கள் நினைத்தது போல் தற்போது ஆயிரம் கோடி ரூபாய் வசூலை லியோ பெறாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதற்குக் காரணம் தற்போதைய சூழலில் ஹிந்தி சினிமாவில் இருந்து ஒரு திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தால் மட்டுமே அது ஆயிரம் கோடி ரூபாயை தொடும். ஆனால் லியோ திரைப்படம் ஹிந்தியில் அத்தகைய சாதனையை செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
அதிகபட்சமாகவே அங்கு 30 முதல் 50 கோடி ரூபாய் வந்தாலே பெரிய விஷயம் தான் என்று பலரும் கூறுகின்றனர்.இதன் காரணமாக லியோ திரைப்படம் அதிகபட்சமாக 500 கோடி ரூபாய் வரை தான் வசூல் செய்யும் என்றும் ஆயிரம் கோடி ரூபாய் என்ற மைல் கல்லை தொட வேண்டும் என்றால் ஏதேனும் அதிசயம் தான் நிகழ வேண்டும் என்றும் பலரும் கூறியிருக்கிறார்கள்.
இதேபோன்று கங்குவா திரைப்படம் மீதும் நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும் இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மீது கலவையான விமர்சனமே வந்திருக்கிறது. ஏற்கனவே பொன்னியின் செல்வனின் முதல் பாகம் 500 கோடி ரூபாயும் இரண்டாவது பாகம் 250 கோடி ரூபாயும் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது