திரையரங்கில் தமிழ் சினிமாவின் பெருமையாக கருதப்படும் பொன்னியின் செல்வன் 2 இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனுடன் போட்டியிட இந்த வாரம் மே 12ஆம் தேதி இன்னும் 5 படங்கள் வெளியாகியுள்ளது. அவை கஸ்ட்டடி, குட் நைட், பர்ஹானா, இராவணக் கூட்டம், சிறுவன் சாமுவேல் ஆகும். இந்த ஐந்து படங்களின் விமர்சனங்களைப் பற்றிய மேற்பார்வையைக் காணலாம்.
கஸ்ட்டடி
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நாகா சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த திரைப்படம் கஸ்ட்டடி. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிப் படமாக இது தயாராகியுள்ளது. இந்தப் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியுள்ளது. முதல் 45 நிமிடங்கள் மிகவும் நிதானமாக துவங்கி போக போக இடைவேளை வரை சூடாகச் சென்றது. தொடர்ந்து வந்த இரண்டாம் பாதி மிகவும் சுமார். தரமான இசையில் தேவையில்லாத பாட்டு, தேவையில்லா காட்சிகள் இல்லாமல் இருந்து இருந்தாலே இன்னும் நல்ல படமாக வந்து இருக்கும் என ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
குட் நைட்
மணிகண்டன் ஹீரோவாக வர மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் மற்றும் சிலர் நடித்துள்ள திரைப்படம் குட் நைட். விநாயக் சந்திரசேகர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே படக்குழு பல நேர்காணல் என தீவிரமாக புரொமோஷன் செய்து எதிர்பார்ப்பை உண்டாக்கியது. குறட்டை பிரச்சினையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம் பார்வையாளர்களால் ஃபீல் குட் படமாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மணிகண்டனின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பர்ஹானா, இராவணக் கூட்டம், சிறுவன் சாமுவேல்
மிகுந்த சர்ச்சைக்குப் பின்னர் வெளியான திரைப்படம் ஐஷ்வராயா ராஜேஷின் பர்ஹானா. இத்திரைப்படம் திரில்லர் வகையில் உருவாகியுள்ளது. இரு பாதிகளும் நன்றாக சென்றாலும் கிளைமாக்ஸ் சற்று சுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கண்ட மூன்று திரைப்படங்களுக்கு மட்டுமே கூட்டம் கூடுகிறது. மற்ற இரண்டு படங்களும் நல்ல விமர்சனத்தைப் பெற்றாலும் புதிய முகங்களால் பெரிய வரவேற்பைப் பெற இயலவில்லை. இராவணக் கூட்டமும் பர்ஹானா படத்தைப் போலவே சர்ச்சையில் சிக்கி வெளியாகியுள்ளது. சிறுவர்களுக்கு முக்கிய கதாபாத்திரம் கொண்ட சிறுவன் சாமுவேல் திரைப்படமும் சுமாரான விமர்சனத்தைப் பெற்றுள்ளது.