பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும் அது முதல் பாகத்தை விட குறைவான அளவில் வருவது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி திரையரங்கில் வசூலை வாரி குவித்தது. இதனால் அதனை விட இரண்டு மடங்கு இந்த படம் வசூல் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பட குழு போதிய அளவில் ப்ரோமோஷன் செய்யவில்லை. மேலும் வட இந்தியாவில் படக் குழுவினர் எந்த நிகழ்ச்சியும் நடத்தாதது ரசிகர்கள் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே பொன்னியின் செல்வன் காவியம் மிகப்பெரியது. இதனை இரண்டு படங்களாக சுருக்குவது மிகவும் கடினம் என இந்த புத்தகத்தை படித்த பலரும் கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில் படத்தின் முதல் பாகம் 2 மணி நேரம் 50 நிமிடம் ஓடியது. முதலில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் 3 மணி நேரம் இருக்கும் என ஒரு தகவல் பரவியது.
மூன்று மணி நேரம் என்றால் அதனை அமர்ந்து பார்ப்பது மிகவும் கடினம் ஆயிற்று என ரசிகர்களும் கொஞ்சம் கலக்கம் அடைந்தனர். ரசிகர்களை விட திரையரங்கு உரிமையாளர்களுக்கும் அது பெரிய தலைவலியை ஏற்படுத்தும். காட்சிகளை கணக்கிட்டு போடுவது உள்ளிட்ட இதர பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படும்.
எனினும் அந்த தகவல் உண்மை இல்லை என தற்போது கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டாவது பாகம் 2 மணி நேரம் 35 நிமிடம் தான் என்று பட குழுவினர் தெரிவித்து இருக்கிறார்கள். இது சென்சாருக்கு முன் உள்ள நிலவரம் ஆகும். சென்சாரில் சில காட்சிகள் குறைக்கவும் படலாம்.
இதனால் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மிகவும் வேகமாக செல்லும் என எதிர்பார்க்கலாம். படத்தில் சில பாடல்களும் இடம் பெறாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.