இந்திய திரைப்பட உலகில் பாலிவுட் பிறகு மிகப் பெரிய திரைப்பட உலகம் என்றால் அது தெலுங்கு சினிமா தான்.இன்றளவும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சேர்த்து 2000க்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன. தெலுங்கு மக்களின் வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாக சினிமா கலந்ததே இதற்கு மிகப்பெரிய காரணம். ஒரு காலத்தில் மக்கள் கோவிலுக்கு சென்று சாமியை கும்பிடுவதற்கு பதில் என் டி ஆர் சாமி படங்களில் நடித்ததை சென்று அங்கு வேண்டுதல் செய்யும் அளவுக்கு தெலுங்கு மக்கள் சினிமாவை கொண்டாடினர்.
இந்த நிலையில் தெலுங்கு திரைப்படம் தற்போது பாலிவுட் படத்தையே தோற்கடித்து இந்திய சினிமாவின் முகமாக திகழ்கிறது. பாகுபலி , ட்ரிபிள் ஆர், புஷ்பா போன்ற படங்கள் அதற்கு ஒரு உதாரணம்.தற்போது தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய பிரச்சனை உருவெடுத்துள்ளது. படத்தின் தயாரிப்புச் செலவு அதிகரிப்பதாக கூறப்படும் நிலையில் அதற்கான லாபம் விநியோஸ்தர்களால் கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் திரையரங்குகளில் அதிகப்படியான டிக்கெட் விலை விற்பதால் பொதுமக்கள் தற்போது சினிமா பார்க்க வருவதில்லை. இதன் காரணமாக தெலுங்கு திரை உலகில் அண்மையில் வெளிவந்த பல்வேறு படங்கள் தோல்வியை தழுவியது. குறிப்பாக பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ஆச்சாரியா திரைப்படமும் மண்ணைக் கவியது.
இதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைவதை தடுக்க வியாபார முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும், டிக்கெட் விலையை ஒழுங்குபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன் காரணமாக தற்போது எந்த ஒரு படப்பிடிப்பும் நடைபெறவில்லை .
இதனால் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க இருந்த புஷ்பா திரைப்படத்தின் இரண்டாவது பாகம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் தற்போது உள்ள சூழ்நிலையில் படத்தை எடுக்க முடியவில்லை என்றும் அதனால் நடைபெறும் போராட்டத்திற்கு தான் ஆதரவு வழங்கும் விதமாக படப்பிடிப்பை நிறுத்தி உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. இதனால் புஷ்பா 2 திரைப்படம் நடப்பாண்டு வெளி வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.