நகைச்சுவை நடிகரான சூரியை வைத்து ரண கொடூரமான படத்தை எடுத்துக்காட்டி தமிழ் சினிமாவில் நான் தான் முன்னணி இயக்குனர் என்று மீண்டும் ஒருமுறை வெற்றிமாறன் நிரூபித்து இருக்கிறார். விசாரணை என்ற பெயரில் போலீசார் செய்யும் ரணகளங்களை தோலுரித்து காட்டியிருக்கும் திரைப்படம் தான் விடுதலை.
இந்த படம் மக்கள் போராட்டம், சாதி ஏற்றத்தாழ்வு என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறது. தமிழ்நாட்டில் விடுதலை திரைப்படம் 23 கோடி ரூபாய் வசூலை இதுவரை செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தை நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். அவருக்காக சிறப்பு காட்சி சென்னையில் நேற்று போடப்பட்டது ரஜினிகாந்துக்கு சிறப்பு வரவேற்பை பட குழுவினர் அளித்தனர்.
இதனை அடுத்து படத்தைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் வெற்றிமாறனை கட்டி அணைத்து பாராட்டி இருக்கிறார். இந்த நிலையில் இன்று சமூக வலைத்தளத்தில் விடுதலை படம் குறித்து அவர் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் விடுதலை திரைப்படம் இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திடாத கதை களம்.
இது ஒரு காவியம் என பாராட்டியுள்ளார். சூரியன் நடிப்பு பிரமிப்பு என்று குறிப்பிட்டுள்ள அவர் இளையராஜா என்றும் இசையில் ராஜா என பாராட்டியுள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் திரையுலகில் பெருமை எனவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இந்த படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்திற்காக மிகவும் ஆவலுடன் காத்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.நடிகர் ரஜினியின் இந்த பாராட்டு பட குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது. ஏப்ரல் 14ஆம் தேதி தான் பெரிய திரைப்படங்கள் திரைக்கு வருகிறது. அதுவரை விடுதலையின் ஆதிக்கம் தொடரும் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.