ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மெல்போன் இந்திய திரைப்பட விழா வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்குகிறது.கொரோனா அச்சுறுத்தலை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திரைப்பட விழா மெல்போனில் நடைபெறுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் ஷாருக்கான் விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். இதில் சிறந்த நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக வென்றார்.
இந்த நிலையில் வரும் 12ஆம் தேதி தொடங்க உள்ள இந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் முக்கிய விருந்தாளியாக நடிகை சமந்தா பங்கேற்க உள்ளார்.அன்றைய தினம் நடிகை சமந்தா ஆஸ்திரேலியாவில் உள்ள தனது ரசிகர்களிடம் உரையாட உள்ளார். சமந்தாவுக்கு இது மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை சமந்தா கடந்த ஆண்டு ஐ எஃப் எம் விழாவில் தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன்.
ஆனால் கொரோனா காரணமாக அது இணையம் வழியாக நடைபெற்றது. தற்போது உலகம் மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளது. இதில் பங்கேற்று ஆஸ்திரேலிய ரசிகர்களை சந்திக்க உள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். புதிய சினிமாவை கொண்டாடும் விதமாக இந்தியர்களும் சினிமா காதலர்களும் சங்கமிக்க உள்ளதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா தனது திரைப்பட வாழ்க்கை குறித்து பேச உள்ளார். இந்தத் திரைப்பட விழாவின் இயக்குனர் , நடிகை சமந்தா ஆஸ்திரேலியாவுக்கு வருவது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றும் ரசிகர்கள் அவரது வருகையை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
நடிகை சமந்தா பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் வில்லியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். இதற்காக நடிகை சமந்தாவுக்கு விருது வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் கமல்ஹாசன் நடித்த விக்ரம், பார்த்திபன் நடித்த இரவின் நிழல் , மாதவன் நடித்த ராக்கெட்டரி ஆகிய படங்கள் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது