இந்திய சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் சிறப்பாக வலம் வருபவர் சமுத்திரகனி. 2003 முதல் இயக்குனராக இருக்கும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் படங்கள் செய்துள்ளார். பல நல்ல திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் சசிகுமார் நடித்த நாடோடிகள் படத்திற்கே மிகவும் பிரபலமானார்.
அவ்வப்போது அவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே இயக்குனர் பணியையும் செய்து கொண்டு தான் இருக்கிறார். சமுத்திரகனி கடைசியாக இயக்கிய படம் 2021ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான வினோதய சித்தம். தம்பி ராமையா முன்னணி நடிகராக நடித்த இந்தப் படம் சிறிய பட்ஜெட்டில் தயாராகி பெரிய வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தை பவன் கல்யாண், சாய் தரம் தேஜ், பிரியா பிரகாஷ் வாரியர், கெட்டிகா ஷர்மா என பெரிய நடிகர்களை வைத்து சமுத்திரகனியே தெலுங்கில் ரீமேக் செய்கிறார். வருகின்ற ஜூலை 28ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. தமிழில் சிறப்பாக செய்த படம் ரீமேக்கிலும் நல்ல வசூலை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமுத்திரகனியின் அடுத்தப் படம்
இப்படத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இயக்குனர் சமுத்திரகனி பேட்டி ஒன்றில் தன் அடுத்தப் படத்தைப் பற்றி பேசியுள்ளார். அடுத்ததாக தமிழில் துல்கர் சல்மானை வைத்து ஓர் பேன் இந்தியா படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்தப் படத்தை தெலுங்கு நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ராணா டகுபதி தயாரிக்க இருக்கிறார்.
தற்போது கிங் ஆப் கோத்தா எனும் மலையாளப் படத்தில் பிஸியாக இருக்கும் துல்கர் சல்மான் அடுத்து சமுத்திரகனியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சொல்லியுள்ளார். நீண்ட ஆண்டுகளுக்குப் பின் பெரிய நடிகரை வைத்து பெரிய படத்தை செய்யவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.