கமல் ஹாசன், சுஜாதா, ரங்கராஜன் மூவரும் இணைந்து பணியாற்றிய ‘ விக்ரம் (1986) ’ திரைக்கதையை ராஜ்சேகர் இயக்கினார். கமல் ஹாசன், லிஸ்ஸி, சாருஹாசன், சத்யராஜ், மனோரமா, சந்தான பாரதி, அம்பிகா, சின்னி ஜெயந்த், ஜனகராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான இந்த விக்ரம் திரைப்படம் எதிர்பார்ப்பை கடந்து அன்று விமர்சன மற்றும் வர்த்தக ரீதியாக வெற்றி பெறத் தவறியது.
இந்தப் படத்தின் கதாபாத்திரங்களை வைத்தும் கூடுதலாக தன் பாணியில் கதாபாத்திரங்களை செதுக்கி விக்ரம் (2022) படத்தை தந்தார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தின் அவர் ஏற்கனவே இயக்கிய கைதி படத்தையும் இணைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன் தனி யூனிவர்ஸை உருவாக்கியுள்ளார். அது தான் எல்.சி.யூ.
தற்போது விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘ லியோ ’ படம் இந்த யூனிவர்சில் சேர்கிறதா அல்ல தனித்துவமான படமா என இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மிகப் பெரிய பட்ஜெட் என்பதால் ரீலீசுக்கு முன் அதுப் பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்.சி.யூவில் சத்யராஜ்
விக்ரம் (1986) படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்துமே லோகேஷ் கனகராஜின் படத்தில் வரவில்லை, ஒரு சிலர் மட்டுமே வந்துள்ளனர். அதில் மிக முக்கியமானவர்கள் கமல் ஹாசன் மற்றும் சந்தான பாரதி. இவர்கள் தவிர்த்து பழைய விக்ரம் படத்தில் பல பெரிய நடிகர்கள் உள்ளனர்.
அதில் ஒருவர் ‘ சுகிர்தராஜ் ’ ரோலில் நடித்த சத்யராஜ். நேர்காணல் ஒன்றில், “ 1986 விக்ரம் படத்தின் இறுதியில் உயிர் துறக்கும் சத்யராஜ் லோகேஷ் கனகராஜின் யூனிவர்ஸில் வருகிறார் என வெளியில் பேசிக் கொள்கிறார்கள் இது உங்களுக்கு தெரியுமா ” என நகைச்சுவையாக கேட்டார் தொகுப்பாளார்.
அதற்கு சத்யராஜ், “ எப்படிங்க… அந்தப் படத்தில் நான் கமல் சார், ஹீரோயின் லிஸ்ஸி மூவருமே ஃபிளைட்டில் இருந்து குடிக்கும் போது என்னுடைய பேராஷூட்டை கட் செய்து தான் என்னுடைய கதாபாத்திரத்தை க்ளோஸ் செய்கிறார் கமல் சார்…. ஒருவேளை புன்னகை மன்னன் படத்தைப் போல மரத்தில் எதேனும் சிக்கி உயிர் பிழைப்பதாக காட்டலாம் அல்லது அந்த சத்யராஜின் மகன், தம்பி யாராவது இதே முக பாவனையுடன் மீண்டும் படத்தில் வரலாம். சினிமாவில் எல்லாம் நாம் சேர்ப்பது தானே. ” எனச் சிரித்துக் கொண்டே சொன்னார் சத்யராஜ்.
உற்சாகத்தில் ரசிகர்கள் பரப்பும் வதந்திகளை நகைச்சுவையாக கேலி செய்தார் சத்யராஜ். உண்மையில் அவர் மீண்டும் லோகேஷ் கனகராஜின் யூனிவர்ஸில் வருவது குறித்து எந்த தகவல்களும் இல்லை.