தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. அவர் காதலன் படத்தில் எழுதிய டேக் இட் ஈசி ஊர்வசி என்ற பாடல் மிகவும் பிரபலமானது. பாடல்கள் என்றால் தமிழில் தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணங்களை உடைத்து நவீன காலத்திற்கு ஏற்ப எழுதிய முதல் பாடல் என்று அதனை சொல்லலாம்.
ஆனால் இந்த பாடல் ஏன் டேக் இட் ஈசி ஊர்வசி என வந்தது. அந்தப் பாடல் எப்படி உருவானது என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? டேக் இட் ஈசி ஊர்வசி என அந்த வரி நாம் அனைவரும் நினைத்தது போல் நடிகை ஊர்வசியை வைத்து தான் இந்த பாடல் எழுதப்பட்டதாம்.
இது குறித்து நடிகை ஊர்வசி அளித்துள்ள பேட்டியில் , மகளிர் மட்டும் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நாசருடன் இணைந்து ஒரு பாடல் வந்தது. அப்போது படப்பிடிப்பின் போது தான் அந்தப் பாடலைக் கேட்டேன். அதில் காளைமாடு ஒன்று கரவை மாடு மூன்று என எழுதி இருந்தார்கள்.
இதை கேட்டதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. கரவமாடு என்று எப்படி நம்மளை சொல்லலாம். அதற்கு நாம் வாய் அசைப்பது சரியாக இருக்காது. இந்தப் பாட்டை மாற்ற சொல்லுங்கள், இல்லையெனில் நான் நடிக்க மாட்டேன் என்று நான் கோச்சிக் கொண்டேன்.
இந்த விஷயம் பாடலாசிரியர் வாலியின் காதுகளுக்கு சென்றது. இதை அடுத்து அவர் ஊர்வசியிடம் போய் சொல்லுங்கள், கரவ மாடு என்று எழுதி இருந்தாலும் இந்த பாடலுக்கு பிறகு இந்த மூன்று பெண்களும் அந்த ஆணைப்போட்டு படாத பாடு படுத்தப் போகிறார்கள். இதனால் கோபித்துக் கொள்ளாமல் நடிக்க சொல்லுங்கள். டேக் இட் ஈசி என எடுத்துக்க சொல்லுங்கள் என்று வாலி கூறியதாக எனக்கு பதில் வந்தது.
படம் வெளிவந்தது பிறகு, சிறிது நாள் கழித்து, ஒருநாள் மேடம் உங்கள் பெயரில் ஒரு பாடல் வந்திருக்கிறது என அனைவரும் சொன்னார்கள். அப்படி என்ன பாடல் என நான் அதைக் கேட்க போது டேக் இட் ஈஸி ஊர்வசி என பாடல் முழுவதும் வந்தது. உடனே கவிஞர் வாலியிடம் இது குறித்து கேட்டேன்.
அதற்கு அவர், ஆம் நான் உன்னை நினைத்து தான் இந்த பாடலை எழுதினேன். டேக் இட் ஈஸி ஊர்வசி அதில் இன்னொரு வரியும் எழுதி இருக்கிறேன். ஊசி போல உடம்பிருந்தால் நீ ஊசி போல் இருக்கிறாய் உடம்பை பார்த்துக்கொள் என்றும் அந்த பாடலில் கூறியிருக்கிறேன் என்று கவிஞர் வாலி எனக்கு பதில் அளித்தார் என்று ஊர்வசி கூறியுள்ளார்.