தளபதி விஜய் அடுத்தகட்டமாக சினிமாவை விட்டு முழுவதுமாக வெளியே வந்து அரசியல் பணிகளை மேற்கொள்ள உள்ளார். அதற்காக கடந்த வாரம் ‘ தமிழக முன்னேற்ற கழகம் ’ எனும் பெயரில் கட்சியைப் பதிவு செய்துள்ளார். கோலிவுட் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போது இது போன்ற துணிச்சலான முடிவு அதிர்ச்சியை உண்டாக்கினாலும் பாராட்டுக்குரியது.
ஏற்கனவே மக்கள் நற்பணியை தன் மக்கள் இயக்கத்தின் மூலம் செய்துவந்தாலும் அதைப் பெரிய அளவில் செயல்படுத்த பதவி சக்தி தேவைப்படுவதால் அரசியலுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்காக 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே முழு கவனம் என்றும் இந்த ஆண்டு தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதனையும் தெளிவாக சொல்லியுள்ளார்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், மக்களுக்காக நல்ல பணிகளை செய்தும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் தெரியாமல் இருப்போரை தன் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஊழல் இல்லாத மக்கள் பணிகளை மட்டுமே கருத்தில் கொள்ளும் கட்சியாக உருவாக்கி வருகிறார். தற்போது அடுத்ததாக விஜய் எந்த தொகுதியில் நிற்பார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தக் கேள்விக்கு சரியான பதில் 2026 தேர்தலுக்கு முன்னர் தான் தெரியும். ஆனால் தகுந்த வட்டாரங்களில் சில செய்திகள் கசிந்துள்ளன. அதன்படி, விஜய் & கோ முதலில் தென் மாவட்டங்களில் வலுப்பெற திட்டம் தீட்டியுள்ளது. இதற்காக முதல் மாநாட்டை தூத்துக்குடி அல்லது நெல்லையில் நடத்த முடிவு செய்துள்ளனர்.
முதல் மெகா மாநாட்டில் கட்சியின் சின்னம் மற்றும் கொடியை அறிமுகம் செய்யக் காத்திருக்கிறார்கள். மஞ்சள் – சிகப்பு நிறத்தில் கொடி இருக்கும் என சில தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், தூத்துக்குடி அல்லது நாகை தொகுதியில் தளபதி விஜய் போட்டியிடுவார் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.