பொங்கலை முன்னிட்டு வாரிசு துணிவு திரைப்படம் ரிலீசாக உள்ளது தான் தமிழ் திரைப்பட உலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட இரு நடிகர்களின் படமும் ஒரே நேரத்தில் வருவதால் திரையரங்குகள் என்ன கதிக்கு ஆகப் போகிறது என்று இப்போதே பலரும் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரு நடிகர்களின் படமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தில் ராஜு விஜய் தான் நம்பர் ஒன் என்று பேசி வருவதால் அது உண்மையா இல்லையா என்று தற்போது பொங்கல் ரிலீஸ் இல் தெரிந்துவிடும் என அனைத்து தரப்பும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் எண்ணிக்கை பொறுத்தவரையில் வாரிசை விட துணிவு தான் அதிக அளவில் ரிலீஸ் ஆகிறது. இதனால் முதல் மூன்று நாட்களில் எந்த படத்தின் கதை நன்றாக இருக்கிறது என பொதுமக்கள் விரும்புகிறார்களோ அந்த படத்திற்கு தான் கூடுதல் திரையரங்குகள் கிடைக்கும். அதை வைத்துப் பார்க்கும்போது தமிழகத்தில் துணிவு திரைப்படம் வாரிசை விட அதிக வசூலை பெற வாய்ப்புள்ளது.
எனினும் தமிழகத்தை தவிர கேரளா ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் விஜய்க்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் உலக அளவில் வசூலில் வாரிசு முன்னிலை பெறலாம். ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு பொங்கல் அன்று பேட்ட, விசுவாசம் திரைப்படம் ஒன்றாக வெளியானது. இதில் தமிழகத்தில் விஸ்வாசம் அதிக வசூலையும், உலக அளவில் பேட்ட அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதேபோன்று 8 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜில்லா, வீரம் திரைப்படத்திலும் இதேநிலை தான் இருந்தது.
வீரம் தமிழகத்தில் அதிக வசூலையும் ஜில்லா தமிழகத்தை தாண்டி கேரளா, யு ஏ இ போன்ற பகுதிகளில் அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதே போன்ற ஒரு நிலை தான் தற்போது துணிவு, வாரிசு படத்திற்கும் ஏற்படும். இதில் ஏதேனும் ஒரு படம் கலவையான விமர்சனத்தை பெற்றால் தமிழ்நாடு மற்றும் உலக அளவில் அதிக வசூலை ஒரு படம்தான் வெற்றி பெறும். அது வாரிசா இல்லை துணிவா என்று பொங்கல் பண்டிகையின் போது தெரிந்துவிடும்.
ஒருவேளை இரண்டு படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்றால் மேலே சொன்னது போல் தமிழகத்தில் துணிவும் உலக அளவில் வாரிசும் முன்னிலை பெற வாய்ப்பு இருக்கிறது. அதிலும் வெறும் இருபது கோடி வித்தியாசம் தான் அதிகபட்சமாக இருக்கும். இதனால் இரண்டு படங்களும் பொங்கல் வின்னராக வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.