பரியெரும் பெருமாள், கர்ணன் திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பெரிய மதிப்பைப் பெற்றுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். இரு படங்களிலும் சாதியால் ஒடுக்கப்பட்டோரின் வலியையும் வேதனையையும் தெளிவாக காட்டியுள்ளார். இதனால் ஒரு பக்கம் சிலர் இவரைக் குறை கூறினாலும் பலராலும் பாராட்ட்பட்டு வருகிறார். இவர் இயக்குனர் ராமிடம் அசிஸ்ட்டன்ட் இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் அவரே ஹீரோவாக வரும் திரைப்படம் மாமன்னன். இதில் பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். அண்மையில் வடிவேலு வில்லன் முகம் கொண்ட போஸ்டர் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. முதல் 2 படங்களின் சாயலிலே இதுவும் தயாராகுவது போல் தெரிகிறது.
முழு நேரமும் அரசியலில் ஈடுபடவிருக்கும் உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படமாக இது அமைகிறது. தன் கடைசிப் படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் தான் இயக்க வேண்டும் என்ற குறிக்கோளில் இருந்தார். மாரி செல்வராஜ் இந்தப் படத்தை தவிர தனுஷின் தயாரிப்பில் அவரை வைத்து ஓர் படம் மற்றும் துருவ் விக்ரமுடன் கபடி சம்மந்தப்பட்ட ஓர் படம் கையில் உள்ளது.
மூன்று படங்கள் கையில் இருந்த போது முதலில் ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் மாமன்னன் படத்தையே துவங்கினார் மாரி செல்வராஜ். இதற்கு உதயநிதி ஸ்டாலின் மட்டுமல்ல துருவ் விக்ரம் மற்றும் தனுஷின் விட்டுக்கொடுக்கும் மனமே காரணம் என்பதையும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அவரின் கடைசி படம் என்னுடைய இயக்கத்தில் இருக்க வேண்டும் என விரும்பினார். நான் துருவ் விக்ரம் மற்றும் தனுஷ் படங்களின் ப்ரீ – புரொடக்ஷன் பணிகளில் இருந்த போது உதயநிதி ஸ்டாலின் இரு படங்களின் நடிகர்களையும் அழைத்து தம் இறுதிப் படத்தைப் பற்றி விவரித்து முதலில் தன் படத்தை துவங்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். இருவரும் சம்மதித்தனர். ” எனும் வெளிவராத விஷயத்தை கூறி நெகிழ்ந்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்குக் மாமன்னன் திரைப்படம் ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்களும் சிறப்பாக தயாராகி வருகிறது. விரைவில் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.