வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரைக்கு வந்து விஜய் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது. இதனால் வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்தார். தற்போது இந்த படம் எப்படி உள்ளது என்று பார்க்கலாம்.
வாரிசு திரைப்படத்திற்கு தொடக்கத்தில் இருந்து பெரும் எதிர்பார்ப்பு அவ்வளவாக இல்லை. தற்போது இதுவே வாரிசு படத்திற்கு பெரிய பலமாக மாறிவிட்டது. சுமாரான படத்தை தான் விஜய் ரசிகர்கள் வம்சியிடமிருந்து எதிர்பார்த்து சென்றனர். ஆனால் இயக்குனர் வம்சி பொங்கல் விருந்தே வைத்து விட்டார். பொங்கல் பண்டிகையை குடும்பம் குடும்பமாக கொண்டாடுவார்கள் என்பதால் நல்ல குடும்ப கதையை மையமாக வைத்து வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி படைத்திருக்கிறார்.
நாம் 2000களில் பார்த்த விஜயை இயக்குனர் வம்சி நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார். விஜயை பார்க்கும்போது சச்சின் படத்தில் பார்த்த ஒரு நெகிழ்ச்சி இருந்தது. விஜய், யோகி பாபு இணைந்து வரும் காட்சிகள் திரையரங்குகளில் சிரிப்பு மத்தாப்பாக இருந்தது. முதல் பாதி குடும்பத்தினருக்கும் இரண்டாவது பாதி விஜய் ரசிகர்களுக்கும் என படத்தை கலவையாக வம்சி கொடுத்திருக்கிறார். படத்தின் முக்கிய பலமே பின்னணி இசை, பாடல்களும் தான்ம் ரஞ்சிதமே பாடல் தியேட்டரைதிருவிழா போல் மாற்றிவிட்டது.
படம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும் அனைத்து காட்சிகளும் கோர்வையாகவும் கதைக்கு ஏற்பது போல அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் விஜய் பிடிக்காதவர்களுக்கு படத்தின் நீளம் கொஞ்சம் மைனஸ் ஆக தெரியலாம். குறிப்பாக படத்தில் வரும் ஜெனரல் மீட்டிங் காட்சி விஜய் ரசிகர்களுக்கு வேண்டுமானால் விருந்தாக இருக்கும். மற்றவர்களுக்கு பெரிய லாஜிக் ஓட்டை அந்த காட்சியில் தெரியும். படத்தின் நாயகியான ராஷ்மிகாவுக்கு பெரிய அளவில் வேலை இல்லை. மேலும் வம்சி தெலுங்கு இயக்குனர் என்பதால் கொஞ்சம் தெலுங்கு வாடை அடிக்கிறது. பற்றாக்குறைக்கு நடிகர் விஜயும் சில வசனங்களை தெலுங்கில் பேசுகிறார். மொத்தத்தில் சில குறைகள் இருந்தாலும் வாரிசு திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.