இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் மிகுந்த எதிர்பார்ப்புகள் நிறைந்த படங்களில் லியோ முன்னிலை வகிக்கிறது. விஜய்யின் வாரிசு பட ஷூட்டிங்கின் போதே தளபதி 67 அறிவிப்பு எப்போது என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் கிடந்தனர். ஜனவரி இறுதியில் அதிகாரபூர்வ அறிவிப்புடன் படப்பிடிப்பையும் துவங்கினர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்ட பல பெரிய நட்சத்திரங்கள் கொண்ட பிரம்மாண்ட படையுடன் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. 1 மாதம் கொண்ட காஷ்மீர் அட்டவணையை விரைந்து முடித்து அதற்கு ஓர் வீடியோவையும் அப்டேட்டாக வழங்கியது படக்குழு.
துவக்கம் முதலே இந்தப் படம் எல்.சி.யூ என பல வதந்திகள் பரவின. படத்தில் நடிப்பவர்களை வைத்து ரசிகர்களே அதைக் கற்பனை செய்துக் கொண்டுள்ளனர். ஒருவேளை இருக்கலாம் ஆனால் இன்றுவரை அதிகாரபூர்வமாக அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. ஒரு மாதத்திற்கு முன் லியோவில் விக்ரம் படத்தில் சந்தனமாக வந்த விஜய் சேதுபதி நடிப்பதாக செய்திகள் பரவின.
ரசிகர்களைத் தாண்டி படக்குழுவின் முக்கிய நபரான ரத்தனகுமாரும் மறைமுகமாக சந்தனதின் கண்ணாடியை டுவீட் செய்து ரசிகர்களின் உற்சாகத்தைத் தூண்டினார். அண்மையில் விஜய் சேதுபதி தான் லியோ படத்தில் நடிக்கவில்லை எனத் தெளிவாகக் கூறி அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்றாலும் அவரது குரல் தொடர்ந்து வரத் தான் போகிறது. வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்க்கு தமிழில் விஜய் சேதுபதி டப்பிங் செய்யவுள்ளார். ஓரிரு நாளில் அதை அவர் நிறைவும் செய்துவிடுவார்.
தற்போது சென்னையில் ஷூட்டிங் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அடுத்து ஹைதராபாத் ராஜாஜி பிலிக் சிட்டி மற்றும் ஏர்போர்ட்டில் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. சில காட்சிகளுக்காக வெளிநாடு செல்லவும் இருக்கின்றனர். அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜைக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிப்பு கொடுத்ததால் மற்றும் பெரிய பண்டிகைக்கு உபயோகிக்கும் நோக்கில் லோகேஷ் கனகராஜ் & கோ விரைந்து ஷூட்டிங்கை முடித்து வருகிறது.