தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவிலும் கொடிகட்டி பறக்கும் நட்சத்திரங்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜய். பூவே உனக்காக திரைப்படத்தில் தொடங்கி, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, திருமலை, கில்லி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி, கத்தி என பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து தனது ரசிகர்களை ஆலமர விழுதுகளாக பரப்பி எட்ட முடியாத இடத்தில் உயர்ந்திருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் விஜய்க்கு சினிமா பயணம் அந்தளவு சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. நாயகனாக அவர் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் அறிமுகமாக, அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இந்தப் படத்தை அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியிருந்தார். தொடர்ந்து, ரசிகன், தேவா, ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, செல்வா உள்ளிட்ட திரைப்படங்களும் எஸ்.ஏ.சி. இயக்கத்திலேயே வந்தன.
அந்த சமயத்தில் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த பூவே உனக்காக திரைப்படம், விஜயை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சேர்த்தது. இந்த நிலையில் சமீபத்தில் விஜயகாந்தின் தேமுதிக கட்சியை சேர்ந்தவரும், நடிகருமான மீசை ராஜேந்திரன் விஜய் – விஜயகாந்த் உறவு பற்றி வெளியே வராத சில தகவல்களை கூறி இருக்கிறார். இது பற்றி தனியார் யூ டியூப் சேனலில் பேசிய அவர்,
நாளைய தீர்ப்பு வெளியான சமயத்தில் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கு 40 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் அதிகரித்தது. ஒன்று வீட்டை விற்று கடனை அடைக்க வேண்டும் அல்லது மீண்டும் ஒரு படத்தை எடுத்து அதில் வரும் லாபத்தை கடனை அடிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார் எஸ் ஏ சந்திரசேகர். அந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் விஜயகாந்த்.
கேப்டன் பிரபாகரன் வெளியாகி ஆக்சன் ஹீரோ அந்தஸ்துக்கு விஜயகாந்த் சென்றிருந்தார். அப்போது விஜயகாந்தை சந்தித்த சந்திரசேகர், தனது மகனை வைத்து இயக்கும் அடுத்த படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறினார். மறுப்பு ஏதும் கூறாமல் உடனடியாக விஜயகாந்த் ஒப்புக்கொண்டார். விரைவில் சூட்டிங் பணிகளும் முடிக்க செந்தூரப்பாண்டி வெளியானது. விஜயகாந்த் இருக்கிறார் என்ற ஒரே காரணத்தினால் படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட, வசூலும் எகிறியது. ஆனால் அது விஜயகாந்த்தை விட விஜய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கப்பட்டிருந்தது.
ஆக்சன் காட்சிகளில் விஜய் பின்னி எடுக்க, அமைதியாக நாற்காலியில் உட்கார்ந்திருப்பார் விஜயகாந்த். இந்த நேரத்தில் அப்படி ஒரு படத்தில் விஜயகாந்த் நடிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் எஸ்.ஏ சந்திரசேகர் கேட்டுக்கொண்டார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் இதனை செய்தார். இப்படி விஜய் வாழ்க்கையில் மிகப்பெரிய உதவியை செய்தவர் விஜயகாந்த். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நலம் முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். விஜய் இதை எதையுமே கண்டுகொள்ளாமல், அவரை ஒரு நாள் கூட நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவில்லை. இதுதான் ரொம்ப வருத்தமாக இருக்கிறது என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாய் இருக்கும் ரசிகர்கள், நடிகர் விஜய்க்கு இப்படி ஒரு முகமும் இருக்கிறதா என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.