‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்ததால் நாங்கள் பெற்றோராகியுள்ளோம் என்கிற செய்தியை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், வெறும் நான்கு மாதங்களில் எப்படி குழந்தை பிறக்கும். வாடகை தாய் மூலம் பெற்றிருந்தாலும் அதற்கு அனுமதி எப்படி திருமணத்திற்கு முன்பே கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் என்ன குளறுபடி நடந்தது என பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
ஒருபடி மேலே சென்று, வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்வதற்கு சில விதிமுறைகள் இருப்பதாகவும், அதனை நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி மீறி இருப்பதாகவும் சிலர் குற்றம் சாட்டி புகாரும் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இரட்டை குழந்தைகள் விவகாரம் குறித்து சென்னை வேப்பேரி பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி மீது சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் புகார் அளித்துள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
“திருமணம் ஆகி பல கட்டங்களாக முயற்சி செய்து குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்கிற நிலையில் தான் செயற்கை முறை கருத்தரிப்பு செய்ய முடியும் என்பது ‘சரோகசி -2022 விதி’யில் இருக்கிறது. அப்படி இருக்க, சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்ததுள்ளதாக அறிவித்துள்ள விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா வடகைதாய் மூலம் விதிகளை மீறி குழந்தை பெற்றுள்ளதாக தெரிகிறது. இது சமூக சீர்கேட்டை ஊக்குவிக்கும் நோக்கில் உள்ளது.” என்றார்.
விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினர் தாங்கள் ஆறு வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டதாக அறிவித்திருக்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் உரியமுறையில் விதிகளை பின்பற்றி தான் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுகொண்டோம் என தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.