2023 பொங்கலுக்கு கோலிவுட்டின் இரு ஜாம்பவான்கள் மோதிக்கொள்ள உள்ளனர். இது ரசிகர்கள், சினிமா அரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அனைவரும் தாண்டி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே அதிக எதிர்பார்ப்பில் வைத்துள்ளது. விஜய் நடிப்பில் வம்சி இயக்கியுள்ள வாரிசு மற்றும் வினோத் – அஜித் கூட்டணியில் தயாராகியுள்ள துணிவு பொங்கலுக்கு விருந்து தரவுள்ளனர்.
துணிவு படத்திற்குப் பின் அஜித் 18 மாதங்கள் உலகத்தை சுற்றவுள்ளார். அதன் பின்னரே விக்னேஷ் சிவனுடன் அடுத்தப் படத்தைத் துவங்கவுள்ளார். மறுபக்கம் இளைய தளபதி விஜய் வாரிசு முடிந்த கையோடு தன் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜுடன் ஆரம்பிக்கிறார்.
வாரிசு பட ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ரசிகர்கள் அனைவரும் தளபதி 67 படத்தின் அப்டேட் வேண்டும் என லோகேஷ் கனகராஜ் செல்லும் இடதிற்கெல்லம் சென்று கேட்டுக் கொண்டே இருந்தனர். லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார் என்று தெளிவாக தெரிந்துவிட்டாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்றளவும் வரவில்லை.
2 மாதங்களுக்கு முன் தன் அடுத்த படத்தின் வேலைகளுக்காக சமூக வலைதளங்களில் இருந்து விலகிய இயக்குனர் லோகேஷ் தன் பணியில் தீவிரமாக உள்ளார். தளபதி 67 படத்தின் அறிவிப்பு டிசம்பர் நடுவில் வரும் என முன்னரே செய்திகள் பரவின. அதற்கேற்றவாறு இயக்குனர் லோகேஷ் செயல்பட்டு வருகிறார்.
தளபதி 67 டீஸர் அறிவிப்பு !
விக்ரம் படத்தை ‘ ஆரம்மிக்களாங்களா ’ வசந்தத்தை வைத்து வீடியோ காட்சி மூலம் அறிவித்தது போலவே தளபதி 67க்கும் ஓர் டீஸர் தயாரித்து ரசிகர்களுக்கு பரிசு அளிக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதற்கான ஷூட்டிங் அடுத்த திங்கட்கிழமை நடக்கிறது.
தளபதி 67 கதை இதுதானா ?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கும் படங்களில் தன் விருப்பமான படங்களின் குறிப்புகளை வைப்பார். விக்ரம் படத்திலும் பல காட்சிகளில் நாம் அதைக் காணலாம். ஆனால் இம்முறை தளபதி 67 படத்திற்காக அவர் ஓர் ஹாலிவுட் படத்தின் ரீமேக் உரிமத்தையே பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2005இல் டேவிட் கிரோனேன்பெர்க் இயக்கிய ‘ ஹிஸ்ட்ரி ஆப் வொயலன்ஸ் ’ படத்தின் கதையை வாங்கி அதற்கான திரைக்கதையை மீண்டும் வடிவமைத்து படம் செய்யவிருக்கிறார். இது கேங்ஸ்டர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மற்றும் பல நட்சத்திரங்கள் இணையும் இப்படம் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. சமீபத்தில் நடிகர் நரேனும் தான் இப்படத்தில் இல்லை என்பதையும் அது எல்.சி.யூவில் சேரும் என்றும் கூறியுள்ளார்.