தமிழகத்தில் கடந்த 11-ம் தேதி வாரிசு, துணிவு திரைப்படம் ஓரே நாளில் ரிலீஸ் ஆனது. துணிவு திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினில் ரெட் ஜெயின்ஸ் நிறுவனமும் வாரிசு திரைப்படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரின்ஸ் நிறுவனமும் படத்தை ரிலீஸ் செய்தது. இந்த நிலையில் படத்தின் முதல் நாள் அன்று அதிக இருக்கைகள் கொண்ட திரையரங்குகளில் துணிவு திரைப்படத்தை தான் போட வேண்டும் என ரெட் ஜெயின்ஸ் நிறுவனம் வற்புறுத்தியதாக தகவல் வெளியானது.
மேலும் இனிவரும் திரைப்படங்களை தங்களுக்கு தர வேண்டும் என்றால் துணிவு படத்தை தான் பெரிய ஸ்கிரீனில் போட வேண்டும் என ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்பட்டது. தற்போது துணிவு திரைப்படத்தை விட வாரிசு படத்திற்கு அதிக அளவில் குடும்ப உறுப்பினர்கள் வந்ததால் பல்வேறு திரையரங்குகளில் வாரிசு திரைப்படம் பெரிய திரைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் வாரிசு படத்தின் காட்சிகளும் அதிகப்படுத்தப்பட்டது. எனினும் தமிழகத்தில் உள்ள சில முக்கிய திரையரங்குகள் தொடர்ந்து துணிவு படத்திற்கு பெரிய ஸ்கிரீனை ஒதுக்கி உள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் உள்ள உமா ராஜேந்திர திரையரங்க உரிமையாளர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாரிசு தங்கள் திரையரங்கில் 20 ஆயிரம் பார்வையாளர்களை கடந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள விஜய் ரசிகர் வாரிசுக்கு கூட்டம் அதிகம் வருகிறது என்றால் ஏன் பெரிய திரையரங்கை ஒதுக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த அந்த திரையரங்கு உரிமையாளர் இதை நீங்கள் உதயநிதியிடம்தான் தொலைபேசியில் கேட்க வேண்டும் என்று பதில் அளித்துள்ளார். மேலும் எங்கள் விருப்பப்படி பெரிய ஸ்கிரீனில் மாற்றும் உரிமை எங்களிடம் இல்லை என்றும் அதனை விநியோகஸ்தர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அந்தத் டிவிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெட் ஜெய்ன்ஸ் நிறுவனம் துணிவு படத்திற்கு கூட்டம் வரவில்லை என்றாலும் பெரிய திரையரங்குகள் தான் தர வேண்டும் என்று கூறி வருகிறது என்பது தெரிவதாக விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.