நடிகர் அஸ்வின் பிரபல தயாரிப்பாளரின் மகளை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறு சிறு கதாபாத்திரங்களில் அஸ்வின்
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் கோவையைச் சேர்ந்த அஸ்வின். இவர் ஆஃபீஸ், ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
அதே போல் கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஓ காதல் கண்மணி, எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
இப்படி இருக்க அஸ்வின் பலராலும் கவனிக்கப்பெற்றது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்தான்.
இந்த சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அஸ்வின், விதவிதமான சமையல் செய்து அசத்தினார். ஒவ்வொரு சுற்றிலும் அஸ்வின் என்ன சமைக்கிறார் என்பதை காண்பதற்காகவே ஒரு கூட்டம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டார் அஸ்வின்.
வெள்ளித்திரையில் கதாநாயகன்
அஸ்வின் சமீபத்தில் என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து செம்பி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தந்து விட்டேன் என்னை, லைவ் டெலிகேஸ்ட் போன்ற வெப் சீரீஸிலும் நடித்துள்ள அஸ்வின், குட்டி பட்டாசு, அடிபொலி போன்ற பல பிரபலமான ஆல்பம் பாடல்களிலும் ஆட்டம் போட்டார்.
அஸ்வின் பல பெண்களின் கனவுக்கண்ணாக திகழ்ந்து வருகிறார். எனினும் ஒரு முறை அவர் நடித்த திரைப்படத்தின் விழாவின்போது அவர் பேசிய சில விஷயங்கள் சமூக வலைதளத்தில் கிண்டல் செய்யப்பட்டன. ஆனால் அதன் பின் அவர் தான் ஒரு உணர்ச்சி வேகத்தில் பேசிவிட்டதாக மன்னிப்பு கேட்டார்.
விரைவில் திருமணம்…
இந்நிலையில் அஸ்வின் சமீப காலமாக ஒருவரை காதலித்து வந்ததாக வதந்தி பரவியது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று பின்னால் தெரிய வந்தது. இந்த நிலையில் அஸ்வின் தற்போது புது மாப்பிள்ளையாக தயாராகி வருகிறாராம்.
அதாவது கூடிய விரைவில் தமிழ் சினிமாவின் மிக பிரபலமான தயாரிப்பாளரின் மகளை திருமணம் செய்துகொள்ளப்போகிறாராம். இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று தகவல்கள் கூறுகின்றன.