நடிகர் கேப்டன் விஜயகாந்தின் மறைந்த தினத்தன்று அவரைக் காண முடியாத சூழ்நிலையில் இருந்த சினிமா பிரபலங்கள் தற்போது சென்னை திரும்பியதும் அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அண்மையில் சூர்யா, கார்த்தி, விஷால், ஆர்யா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் செண்டிருந்தார்கள்.
திங்கட்கிழமை அன்று நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது தாயார் இருவரும் அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் விஜயகாந்த் அவர்களின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர். இன்று அதனைத் தெரிவித்து மேலும் சில அறிவிப்புகளை வழங்கியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருவதை அறிந்த ராகவா லாரன்ஸ், அவருக்கு உதவ முடிவெடுத்துள்ளார். இதனைப் பதிவிட்ட அவரை ப்ளூ சட்டை மாறன் நக்கலாக கேலி செய்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் கூறியதாவது, “ விஜயகாந்த் அவர்களின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பதை நான் அறிந்தேன். அவரை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர்கள் சொன்னது என்னைப் பாதித்தது. விஜயகாந்த் சார் எத்தனையோ நபர்களுக்கு சினிமாவில் வளர உதவியுள்ளார். ”
“ பல படங்களில் கவுரவ தோற்றம் அளித்து இளம் நடிகர்களை வளர்த்து விட்டுள்ளார். அப்படிப்பட்டரவரின் மகனுக்கு நான் கண்டிப்பாக எதாவது செய்தே ஆக வேண்டும். அதனால் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் அனைத்து புரொமோஷன் பணிகளையும் நானே எடுத்துச் செய்ய உள்ளேன். ” என்றார்.
மேலும், “ இரண்டு ஹீரோ கதை எதேனும் இயக்குனர்கள் வைத்திருந்தால் என்னை அணுகுங்கள் நான் சண்முக பாண்டியனுடன் இணைந்து நடிக்கிறேன். இது நான் விஜயகாந்த் அவர்களுக்கு செய்யும் கடமை. ” எனத் தெரிவித்தார். நடிகர் ராகவா லாரன்சின் இந்தப் பேச்சுக்கு ப்ளூ சட்டை மாறன் நக்கல் செய்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் பேசிய இந்த வீடியோவுக்கு, “ அடடா ” என பதிவிட்டுள்ளார். அவர் இதனை கேலி செய்யும் நோக்கில் கூறியுள்ளார். சுருக்கமாக சொல்லப் போனால், ராகவா லாரன்ஸ் இதெல்லாம் அவரின் பப்ளிசிட்டிக்காக செய்கிறார் என ப்ளூ சட்டை மாறன் தாக்குகிறார்.