நொச்சி பட்டியைச் சேர்ந்த திரு மூர்த்தி என்கிற இளைஞருக்கு கண் பார்வை இல்லை. இருப்பினும் அவரது குரல் வளம் மிக அற்புதமாக இருக்கும். சமூக வலைதளங்களில் அவரை பின்தொடர்பவர்களுக்கு அவரைப் பற்றி நன்கு தெரியும். திரைப்படப் பாடல்களைப் பாடி அந்த வீடியோவை யூடியூப் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டகிரம் வலைதளத்தில் அவர் பதிவிடுவார்.
அவரது திறமையை கொண்ட இசையமைப்பாளர் டி இமான் அவருக்கு சீரு படத்தில் செவ்வந்தியே என்கிற பாடலிலும், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் வா சாமி என்கிற பாடலிலும் பாடுவதற்கான வாய்ப்பு கொடுத்தார். அவர் பாடிய அந்த இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
விக்ரம் திரைப்படத்தில் பத்தல பத்தல பாடலை பாடி அசத்திய திருமூர்த்தி
கமல்ஹாசன் தயாரிப்பில் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் எழுதி அதை அனிருத் இசையில் பாடிய பத்தல பத்தல என்கிற பாடல் அனைத்து மொழியிலும் ஹிட்டாகியுள்ளது.
அந்தப் பாடலை நொச்சிப்பட்டி திருமூர்த்தி பாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. அவர் பாடுவதை கண்ட கமல்ஹாசன் அவரை நேரில் அழைத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஏ ஆர் ரகுமான் இசை பள்ளியான கே எம் இசைப்பள்ளியில் இசையை திருமூர்த்தி முழுவதுமாக கற்க அனைத்து செலவையும் தான் ஏற்றுக் கொள்ளப் போவதாகவும் கமல்ஹாசன் நம்பிக்கை அளித்துள்ளார். இதற்கு ஏ ஆர் ரகுமான் முழு சம்மதம் தெரிவித்துள்ளார்.
கூடிய விரைவில் திருமூர்த்தி நிறைய திரைப்படங்களில் பாடப் போகிறார், அதை நாம் பார்க்கத்தான் போகிறோம். அவரது இசைப் பயணம் நல்லபடியாக செல்ல நாம் இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம்.