நடிகர் விஜய் நடித்து கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான வாரிசு திரைப்படம் அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பொங்கலுக்கு வெளியான படங்களில் அதிக வசூலை பெற்று முதலிடத்தை பெற்ற வாரிசு திரைப்படம் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தை வெளியிட்ட செவன் ஸ்கிரின்ஸ் நிறுவனம்தான் வாத்தி திரைப்படத்தையும் இன்று வெளியிடுகிறது. இதன் காரணமாக பல்வேறு திரையரங்குகளில் வாரிசு திரைப்படம் இன்று நீக்கப்பட்டது. எனினும் மல்டிபிளக்ஸ் ஸ்கிரீன்களில் வாரிசு திரைப்படம் தொடர்ந்து ஓடிக் கொண்டு வருகிறது. இதன் காரணமாக பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வாரிசு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. சரியாக இரவு 12 மணிக்கு பிப்ரவரி 22ஆம் தேதி வாரிசு திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது.
வாரிசு திரைப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சொல்லப்போனால் விஜய் திரைப்பட வாழ்க்கையில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற பெருமையை வாரிசு பெற்றது. இதன் காரணமாக அமேசான் பிரைமில் வெளியாவதன் மூலம் மேலும் பல ரசிகர்களுக்கு வாரிசு திரைப்படம் போய் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.லியோ திரைப்படம் ஃபேன் இந்தியா படமாக வெளியாகும் நிலையில் வாரிசு ஹிந்தியில் ஓ டி டி மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
ஏற்கனவே நெட்பிளிக்சில் துணிவு ரிலீஸ் ஆகி சாதனை படைத்து வரும் நிலையில் வாரிசும் அத்தகைய சாதனையை அமேசானில் படைக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதனிடையே வாரிசு திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் அமேசான் பிரைமில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் இதுவரை அது குறித்து எந்த தகவலையும் பட குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.