யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன், மீண்டும் ஒரு காதல் கதை, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களை இயக்கியவர் மித்ரன் ஆர்.ஜவஹர். இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் ஃபீல் குட் ரகத்தில் இருக்கும் என்பதால், இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அதேபோல் ரீமேக் படங்களை சுவாரஸ்யம் குறையாமல் இயக்கும் திறமை கொண்ட இயக்குநர் என்பதால், நடிகர் தனுஷ் எப்போது மித்ரன் ஆர்.ஜவஹரை கூடயே வைத்திருப்பார்.
அண்மையில் கலாட்டா கல்யாணம், மாறன் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியானதால், தனுஷ் மார்க்கெட் குறைந்ததாக பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அதிரடி ஆக்ஷன் படங்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. அந்த நேரத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகியது. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. பின்னர் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் படையெக்க, தனுஷிற்கு அசுரன் படத்திற்கு பின் ரூ.100 கோடி வசூல் செய்த இரண்டாவது படமாக திருச்சிற்றம்பலம் அமைந்தது.
இதனால் மித்ரன் ஆர்.ஜவஹரில் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் பலரும் பேசி வந்தனர். அதேபோல் ரஜினிகாந்திற்கும் கதை சொல்லியதாக தகவல் வெளியாகியது. ஆனால் அனைத்து தகவல்களையும் மறுத்த இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர், கதை எழுதி வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இந்த நிலையில் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்க உள்ள அடுத்தப் படத்தில் நடிகர் மாதவன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாதவன் இயக்கி நடித்து வெளியான ராக்கெட்ரி திரைப்படம் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தாலும் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தைப் பெற்றது. இதற்கு பின் மாதவன் – மித்ரன் ஆர்.ஜவஹர் இருவரும் சேர்கின்றனர். தமிழில் விக்ரம் வேதா படத்திற்கு பின் பெரிய ஹிட் கொடுக்க காத்திருக்கும் மாதவனுக்கு இந்த படம் சிறந்த படமாக இருக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.