பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனது முதல் படத்திலேயே முக்கிய இயக்குனர்கள் பட்டியலிலும் இடம் பிடித்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடித்த அந்த திரைப்படம் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒவ்வொரு காட்சிகளும் விவரித்து சாட்டையடி கொடுத்தது. பா ரஞ்சித் இயக்கிய இந்த திரைப்படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனர்களில் ஒருவரானார் மாரி செல்வராஜ்.
முதல் படத்தின் வெற்றியின் மூலம் தனுஷ் உடன் இணைந்த அவர், கர்ணன் படத்தை இயக்கினார். 1990களின் காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கர்ணன் திரைப்படம், பொடியன்குளம் எனும் கிராமத்தில் பேருந்து நிற்காமல் செல்வதையும், அதற்கு பின்னால் இருக்கும் அரசியலையும் தனக்கே உண்டான காட்சி அமைப்பின் மூலம் விவரித்தார் மாரி செல்வராஜ்.
இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் மகன் துருவுடன் அவர் இணைவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக உதயநிதியுடன் அவர் கைகோர்ப்பதாக அறிவிப்பு வெளியானது. வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு மாமன்னன் என பெயர் சூட்டப்பட்டது. சேலத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் இசை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான டிரைலரும் கவனிக்க வைத்தது. இந்த நிலையில் படம் கடந்த 29ஆம் தேதி வெளியாகி வசூலை வாரி குவித்துள்ளது.
இதனிடையே வாழை திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த படம் விரைவில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பா ரஞ்சித் தயாரிப்பில் துருவ் விக்ரம் படத்தை எடுக்கிறார் மாரி செல்வராஜ். இதன் படப்பிடிப்பு தூத்துக்குடியில் ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் பிரபல தமிழக கபடி வீரர் கணேஷ் அவர்களின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்படுகிறது. இவர் தூத்துக்குடி அருகே உள்ள சிறு கிராமத்தில் பிறந்து, தேசிய, ஆசிய அளவிலான கபடி விளையாட்டில் சாதனை புரிந்துள்ளார். மேலும் இவரை மத்திய அரசு கெளரவித்து அர்ஜூனா விருது வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.