ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை தற்போது பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாக்கும் பயோபிக் சீசனாக உள்ளது. அண்மையில் பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஓபன்ஹைமர் திரைப்படம் திரையரங்குகளிலேயே சக்கைபோடு போட்டு வருகிறது.
அதேபோல் பாலிவுட்டில் தோனி, சில்க் ஸ்மிதா, மில்கா சிங், விக்ரம் பத்ரா தொடங்கி ஏராளமானோரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வெளியாகி வெற்றிபெற்றுவிட்டன. அதேபோல் சிவாஜி மஹராஜ், சாய்னா நேவால் உள்ளிட்டோரின் படங்கள் தோல்வியையும் தழுவின.
இந்த நிலையில் பாலிவுட் இயக்குநர் பால்கி இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பது தனது கனவு என்று பிரபல பாலிவுட் இயக்குனர் ஆர் பால்கி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் பால்கி கூறிய போது, 3 தலைமுறைகளுக்கு 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த தலைசிறந்த இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் இளையராஜா.
அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருவேளை அப்படி எடுத்தால், அதுதான் என் கனவு திரைப்படமாக இருக்கும். அதேபோல் இளையராஜா பயோபிக் படத்தை எடுத்தால் அதில் இளையராஜாவாக நடிக்க தனுஷ் தான் சரியான நபராக இருப்பார்.
இருவருக்கும் ஏராளமான முக ஒற்றுமைகள் இருப்பதாக நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல் திரையில் தனுஷ், இசைஞானியாக நடிப்பதை பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். இந்த படத்தை நான் எடுத்தால் அதுதான் தனுஷுக்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய பரிசாக இருக்கும் என்று கூற விரும்புகிறேன்.
ஏனென்றால் என்னைப் போலவே இளையராஜா அவர்களின் மிகப்பெரிய ரசிகர்களில் தனுஷும் ஒருவர் என்று கூறியுள்ளார். ஆனால், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ் நடிப்பாரா? அப்படி ஒரு படம் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கனவே இயக்குனர் ஆர்.பால்கி, தனுஷை வைத்து ’’ஷமிதாப்’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.