அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) வெளியாகிறது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி திரைப்படம் வெளியாவதால், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்திற்கு சிறப்புக் காட்சி இல்லை என்றும், காலை 9 மணிக்குதான் படம் வெளியாவதாகவும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முன்பதிவில் வேறு எந்த படங்களும் செய்யாத சாதனையை ஜெயிலர் புரிந்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் முன்பதிவுக்கு மட்டுமே சுமார் 27 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஒட்டு மொத்தமாக 900 திரையரங்குகளில் ஜெயிலர் படம் வெளியாகிறது. இதற்கு முன் வேறு எந்த திரைப்படமும் இத்தனை திரையரங்குகளில் வெளியானது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் திரைப்படத்தில், மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஜரஃப், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையில் வெளியான காவாலையா பாடல் மற்றும் டைகர் கா ஹுக்கும் பாடல்கள் ஹிட் அடித்தன. இதில் கடந்த மாதம் ஆறாம் தேதி வெளியான காவாலயா பாடல், இன்று வரை அதன் வைப் குறையாமல் செல்லும் இடங்களில் எல்லாம் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. தமன்னாவின் நடன அசைவுகளுக்கே, பெரிய ரசிகர் பட்டாளம் இந்த பாலால் சேர்ந்துள்ளது. ஜெயிலர் படத்தில், தமன்னா தெலுங்கு நடிகையாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஜெயிலர் படத்தில் தான் இடம் பெற்றது குறித்து தமன்னா பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, “நான் சுற்றுலாவுக்காக தாய்லாந்து சென்றபோது திடீரென நெல்சன் செல்போனில் அழைத்தார். தான் எடுக்கும் ஜெயிலர் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்டார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருப்பதால் நான் உடனடியாக சரி என்று சொல்லிவிட்டேன். ரஜினிகாந்தை முதன்முறையாக நான் அங்கிருக்கும் செட்டில்தான் பார்த்தேன். அவர் மிகவும் எளிமையாக இருந்தார். 17 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில், சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று தெரிவித்தார்.