கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். அண்ணாத்த படத்தின் மெகா தோல்வி காரணமாக கட்டாயம் ஹிட் கொடுக்க வேண்டிய இடத்திற்கு ரஜினிகாந்த் தள்ளப்பட்டார். இதனால் பாபா படத்தின் தோல்விக்கு பின் ஏராளமான நட்சத்திரங்களுடன் எப்படி ரஜினிகாந்த் களமிறங்கினாரோ, அதேபோல் ஜெயிலரிலும் களமிறங்கினார்.
சிவராஜ் குமார், மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி என்று பெரிய பட்டாளத்துடன் ரஜினிகாந்த் களமிறங்கினார். ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிய ஜெயிலர் திரைப்படம், ரசிகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளியது. அண்ணாத்த படத்தை விடவும் சிறப்பாக வந்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டினர்.
ஆனால் விமர்சகர்கள் தரப்பில் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி மோசமாக இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக விநாயகனை அடிக்கும் காட்சியிலேயே படம் முடிந்துவிட்டதாகவும், அதன்பின் கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே நன்றாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.
இதனிடையே ஜெயிலர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.76 கோடி என்றும், இரண்டாம் நாளில் ரூ.60 கோடி வரை வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. கடந்த வாரம் வியாழக் கிழமை முதல் செவ்வாய்க் கிழமை வரை தொடர்ந்து விடுமுறை வந்ததால், ஜெயிலர் படத்தின் வசூல் ரூ.400 கோடியை கடந்துவிட்டதாக கூறப்பட்டன. ஆனால் தயாரிப்பாளர்கள் தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் பகிரப்படவில்லை.
ஆனால் ப்ளூசட்டை மாறன் உள்ளிட்ட யூட்யூப் விமர்சகர்கள் பலரும் ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போட் போலியானது என்று வீடியோக்களை பதிவிட்டும், ட்விட்டரிலும் கருத்து பதிவிட்டுள்ளார். ஜெயிலர் திரைப்படம் விக்ரம் படத்தின் காப்பி என்றும் ப்ளூசட்டை மாறன் விமர்சித்து வருகிறார். இதனால் ட்விட்டரில் ப்ளூசட்டை மாறனுக்கும், ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் ரசிகர்கள் மாறனை கண்டபடி திட்ட, பதிலுக்கு பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டில் ஜெயிலர் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களை ப்ளூசட்டை மாறன் பதிவிட்டுள்ளார். அதில் வெளிநாட்டில் ஜெயிலர் படத்தை பார்த்த ரசிகர்கள், படத்தின் முதல் பாதி முழுவதும் விக்ரம் காப்பி.. விக்ரம் காப்பி.. விக்ரம் காப்பி என்று சொல்லி செல்கின்றனர். இதனை பதிவிட்டு ரஜினி ரசிகர்களை கிண்டல் செய்துள்ளார்.