தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். தனது முதல் திரைப்படமான பரியேறும் பெருமாள் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட அவர், சமூகத்தில் சாதி அவலத்தினால் பாதிக்கப்படும் இளைஞரின் வாழ்க்கையை கண்முன்னே நிறுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து, தனுசுடன் இணைந்த மாரி செல்வராஜ், கர்ணன் திரைப்படத்தை எடுத்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
பேருந்து வசதி இல்லாமல் உள்ளூரிலேயே முடங்கிக் கிடக்கும் கிராம மக்களின் வாழ்க்கையையும், அதற்குப் பின்னால் இருக்கும் சாதி அரசியலையும் காட்சி படுத்தி இருந்த மாரி செல்வராஜ், இறுதிக் காட்சியில் ஆக்ரோஷமான கிளைமாக்ஸை கொடுத்து ரசிகர்களின் நெஞ்சங்களை உலுக்கினார். முதல் இரண்டு படங்களிலேயே, கோலிவுட்டில் சிகரம் தொட்ட இயக்குனர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்தார். வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம், கடந்த ஜூன் மாதம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
முந்தைய படத்தில் பேருந்து சாதி அரசியலை கூறிய மாரி செல்வராஜ், இந்தப் படத்தில் நாற்காலிக்கு பின்னால் இருக்கும் சாதிய வன்மத்தை தோலுரித்துக் காட்டினார். இதனால் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நாள்தோறும் மாமன்னன் குறித்த பேச்சுகளே, கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக இருந்தது. அதேசமயம், மாமன்னன் திரைப்படம் வசூலிலும் சக்கை போடு போட்டது. படத்திற்கு ஒரு தரப்பிலிருந்து அமோக வரவேற்பு கிடைக்க, மற்றொரு தரப்பினர் மாமன்னனை எதிர்த்தனர்.
இப்படியான சூழ்நிலையில், மாமன்னனின் ரத்தினவேலுவாக வாழ்ந்த பகத் பாசிலை, ஒரு தரப்பினர் கொண்டாட ஆரம்பித்தனர். படத்தில் சாதிய வன்மம் முற்றிப்போன அரசியல்வாதியாக பகத் நடித்திருக்க, அந்தக் கதாபாத்திரத்தை இணையத்தில் பலரும் கொண்டாடியது சர்ச்சையை கிளப்பியது. ரத்னவேலு கதாபாத்திரத்திற்கு என, விதவிதமான சாதிய பாடல்களுடன் வீடியோவாக மாற்றிய சிலர், அதை இணையத்திலும் பதிவிட ஆரம்பித்தனர்.
இப்படி இருக்க, மாமன்னன் திரைப்படத்தின் 50 ஆவது நாள் வெற்றி விழாவில் பங்கேற்ற மாரி செல்வராஜிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், சாதிய பிரச்சனைகளுக்கு நீங்களும், பா ரஞ்சித் எடுக்கும் திரைப்படங்கள் தான் காரணம் என்று ஒரு சிலர் குற்றம் சாட்டி வருவதாக கூறினர்.
இதற்கு பதில் அளித்த மாரி செல்வராஜ், உண்மையைக் கேட்கும் காதுகளை நான் தேடிக்கொண்டே இருப்பேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து ரத்னவேலு கதாபாத்திரம் கொண்டாடப்படுவது குறித்து பேசி அவர், இங்கு ஒரு படம் நான்கு நாளில் முடிய போவதில்லை. ஒரு படம் பேசப்பட்டு கொண்டே இருக்கும். அப்போது அதன் கதாபாத்திரங்களும் உருமாறும். நிறம் மாறும். அந்தக் கதாபாத்திரத்திற்கான நிலையை அடையும். உண்மையை கொண்டுதான் படம் எடுக்கிறோம். படம் பார்க்க பார்க்க உண்மையை பேசிக் கொண்டே இருப்போம் என்று கூறினார்.