தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், விக்ரம், சூர்யா ஆகியோருக்கு பின் நடிப்பில் அசத்தி வருபவர் தனுஷ். நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம், பாடலாசிரியர், பாடகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என்று பன்முகத்திறமை கொண்டவர். 2012ஆம் ஆண்டு வரை மற்ற நிறுவனங்களின் தயாரிப்பில் நடித்து வந்த தனுஷ், அதன்பின் சொந்தமாக வுண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
முதல்முறையாக தனது மனைவி இயக்கத்தில் 3 படத்தை நடித்ததோடு தயாரிக்கவும் செய்தார். அதன்பின் வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, எதிர்நீச்சல், மாரி, விசாரணை, காக்கா முட்டை, காக்கி சட்டை, நானும் ரவுடிதான், தங்க மகன் என்று தொடர்ச்சியாக பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து நல்ல லாபம் ஈட்டு வந்தார்.
ஆனால் திடீரென ரஜினிகாந்த் நடித்த காலா படத்தை தயாரிக்கும் வாய்ப்பு தனுஷிற்கு கிடைத்தது. இதனால் பெரும் பட்ஜெட்டில் கடன் வாங்கி காலா படத்தை தயாரித்தார். ஆனால் அந்தப் படம் தனுஷிற்கு நஷ்டத்தை கொடுத்தது. இதனால் கடனை அடைப்பதற்காக நடிகர் தனுஷ் கலைப்புலி தாணு தயாரிப்பில் அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் காரணமாகவே விஐபி 2, அசுரன், நானே வருவேன் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் நடித்து கொடுத்தார்.
இதனிடையே போயஸ் கார்டனில் பெரிய வீடு கட்டும் ஆசை தனுஷிற்கு வர, இந்தி, பாலிவுட், ஹாலிவுட் என்று வந்த அனைத்து வாய்ப்புகளையும் கெட்டியாக பிடித்து வெற்றியை கொடுத்தார். திரும்பிய பக்கமெல்லாம் தனுஷ் ஓய்வின்றி நடித்து முடித்தார். இதன் மூலம் தயாரிப்பு நஷ்டம் மற்றும் வீடு ஆகிய செலவுகளை கடந்து அனைத்து கடனிலும் இருந்து தனுஷ் மீண்டுள்ளார்.
இதன் காரணமாகவே மீண்டும் சொந்த தயாரிப்பில் தனுஷ் நடிக்க தொடங்கியுள்ளார். ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து, தயாரிக்க தனுஷ் ஒப்பந்தம் போட்டார். அந்தப் படம் தொடங்குவதற்கு முன்பாகவே அடுத்தப் படத்திற்கும் அட்வான்ஸ் கொடுத்துள்ளார் தனுஷ். கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மீண்டும் நடிப்பதோடு, அந்தப் படத்தையும் தனுஷ் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.