கோட்டடையான், லிங்கா, கபாலி, 2.0, காலா, தர்பார், அண்ணாத்த என்று ரஜினிகாந்த் சமீப காலங்களில் நடித்த படங்கள் அனைத்து தோல்வியடைந்தன. அதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படம் மட்டுமே ஓரளவிற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இந்த சமயங்களில் அஜித் குமார் மற்றும் விஜய் நடித்த படங்கள் பெரும் ஹிட்டடித்தன.
இதனால் கோலிவுட்டின் நம்பர் 1 ஹீரோ ரஜினிகாந்தா அல்லது விஜய் என்ற பேச்சுகள் அதிகமாகின. விஜய் நடித்த படங்கள் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் எப்போதும் உச்சத்தில் இருந்தது. இதனால் விஜய் படத்தின் தயாரிப்பாளர்கள் பலரும் விஜயை சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வந்தனர்.
இதனால் சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களுக்கும், ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகியது. சோலோ ரிலீஸ் மட்டுமல்லாமல், சுதந்திர தின விடுமுறையும் வந்ததால், ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்தனர்.
ஜெயிலர் படம் பெரியளவில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெறவில்லை என்றாலும், ரஜினி ரசிகர்களுக்கு தேவையான மாஸ் காட்சிகள் சரியாக பொருந்தியது. இதனால் ஜெயிலர் படத்தின் வசூல் உயர்ந்துகொண்டே சென்றது. முதல் வாரத்தின் முடிவிலேயே ரூ.370 கோடிக்கும் அதிக வசூலை செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தற்போது படம் வெளியாகி 15 நாட்களுக்கு மேலாக ஆகியுள்ள நிலையில், ஜெயிலர் படத்தின் வசூல் ரூ.525 கோடிக்கும் அதிகமாக ஈட்டியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் கோலிவுட் மட்டுமல்லாமல் இந்தியாவின் நம்பர் 1 ஹீரோவும் ரஜினிகாந்த் தான் என்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அலப்பறை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக விஜய் ரசிகர்களையும் வம்புக்கு இழுத்து வருகின்றனர்.