தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசனை அடுத்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் ஆதிக்கம் 1980களில் அதிகரிக்க ஆரம்பித்தது. இரு நடிகர்களுக்கும் சரிசமமாக ரசிகர் பட்டாளம் இணைந்து, ஒவ்வொரு படத்திற்கு முண்டியடித்து கூட்டம் செல்ல இன்னொரு பக்கம் சத்தமில்லாமல் வளர்ந்து கொண்டிருந்தார் நடிகர் விஜயகாந்த். மதுரையில் பிறந்த இவர், தீவிர ரஜினி ரசிகராக இருந்து வந்தார். அங்கிருந்து சினிமா ஆசையுடன் சென்னைக்கு செல்ல, தங்கத் தலைவனை கோடம்பாக்கம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது.
எளிதில் மனதில் ஒட்டிக் கொள்ளும் முக பாவனை உடன் வெள்ளி திரைக்கு அறிமுகமான விஜயகாந்த், மக்களை எளிதில் ஈர்க்கும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கிராமத்து இளைஞர், அடாவடியான பஞ்சாயத்து காரர், அதிரடி ஆக்சன் என அனைத்து களத்திலும் பூந்து விளையாடிய விஜயகாந்துக்கு, தனி ரசிகர் பட்டாளம் குவிய ஆரம்பித்தது. குடும்பப்பாங்கான திரைப்படங்களுக்கும் முக்கியத்துவம் அளித்த அவர், போலீஸ் அதிகாரி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்கத்தையும் கட்டி பாதுகாத்த விஜயகாந்த், அதன் மூலம் பல கோடி ரூபாய் வருவாயை ஈட்டி சங்கத்தின் நலிவடைந்த நடிகர்களுக்கும் உதவிகளை செய்து வந்தார். தமிழ் திரைப்படங்கள் தாண்டி வேறு எந்த மொழிகளிலும் நடிக்காத இந்த கருப்பு சிங்கம், தேசிய முற்போக்கு திராவிடர் முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை தொடங்கினார். இதன் மூலம் இரண்டு முறை சட்டப்பேரவைக்குள் நுழைந்த விஜயகாந்த் ஏராளமான நற்பணிகளை செய்தார்.
அதிலும் 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவராக அந்தஸ்தை பெற்ற விஜயகாந்த், பெரிய அளவில் பேசப்பட்டார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் விஜயகாந்த் கிண்டல் செய்து ஏராளமான வீடியோக்கள் வெளியாகின. இது ஒரு பக்கம் இருக்க, உடல்நிலை குறைவால் அவதிப்பட்ட விஜயகாந்த் அதிலிருந்து தற்போது வரை மீள முடியாமல் தவித்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது பிறந்தநாளன்று தொண்டர்களை காண வந்த விஜயகாந்த், நடக்க முடியாமல் இருக்கையில் அமர்ந்திருந்த வீடியோவை பார்த்து பலரும் கண்கலங்கி போயினர்.
விஜயகாந்த் உதவி என்று கேட்டு வரும் யாருக்கும், எதையும் செய்யும் வள்ளல் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், சிவாஜி கணேசன் மறைவின்போது விஜயகாந்த் முன்னின்று வேலை செய்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிவாஜி கணேசன் மறைவையொட்டி நடைபெற்ற இறுதி ஊர்வலத்தின்போது ஏராளமான மக்கள் வழிமறித்தனர்.
இதனால் வாகனம் செல்ல முடியாமல் அங்கேயே நின்றது. அப்போது அத்தனை நடிகர்களும் வாகனத்தில் உட்கார்ந்திருக்க, நடிகர் விஜயகாந்த் தனி ஒருவனாய் போலீசாருடன் இணைந்து அனைவரையும் விரட்டினார். இப்படி களத்தில் நின்று வேலை செய்த தங்கத்திற்கா இப்படி ஒரு நிலைமை, என அவரது ரசிகர்கள் வீடியோவை பார்த்து கண்கலங்கி வருகின்றனர்.