எடிட்டர் மோகனின் இளைய மகன் ஆன ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராய் இருக்கிறார். அதேபோல் இவரது அண்ணன் மோகன் ராஜாவும், பல வெற்றி படங்களை கொடுத்திருப்பதால் திறமையான இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவர்கள் இருவர் கூட்டணியில் உருவான ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி ஆகிய அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றன.
ஆனால், இந்த படங்கள் அனைத்தும் தெலுங்கு படங்களை ரீமேக் செய்தே எடுக்கப்பட்டிருப்பதாக பலர் மோகன் ராஜாவை குறை கூறி வந்தனர். அதேசமயம் ரீமேக் செய்தாலும், அதை வெற்றிகரமாக மாற்றும் சூத்திரத்தை மோகன் ராஜா வைத்திருப்பதாக பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த சூழலில், முதன்முறையாக தனது தம்பியை விட்டு விட்டு விஜய் பக்கம் சென்றார் மோகன் ராஜா. வேலாயுதம் எனும் பெயரில் உருவான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலில் திருப்திகரமாக அமைந்தது.
இதன்பிறகு, முழுக்க முழுக்க தனது சொந்த கதையை கொண்டு திரைப்படம் எடுக்க முடிவு செய்த மோகன் ராஜா, அதற்கான திரைக்கதையை மெல்ல மெல்ல செதுக்க ஆரம்பித்தார். தனது தம்பி ஜெயம் ரவியை இதில் கதாநாயகனாக்க, 2015 ஆம் ஆண்டு வெளியானது தனி ஒருவன் திரைப்படம். தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத மாறுபட்ட ஒரு திரைக்கதையை கையில் எடுத்த மோகன் ராஜா, அதில் அரவிந்த் சாமியை வில்லனாக்கி ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டினார். சித்தார்த் அபிமன்யு என்னும் கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த்சாமி, கதாநாயகன் ஜெயம் ரவியை ஒவ்வொரு காட்சியிலும் மிரட்ட, தனி ஒருவன் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
அந்தப் படத்தில் மோகன் ராஜா எழுதியிருந்த ஒவ்வொரு வசனங்களும், மிகக் கூர்மையாக இருந்ததால், தனி ஒருவனை மக்கள் கொண்டாடினர். இந்த படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம் யார் என்றால் அது நிச்சயம் ஹிப் ஹாப் ஆதி தான். தீமை தான் வெல்லும் பாடலை தொடங்கி, ஒவ்வொரு காட்சிக்கும் தனது இசையால் வலு சேர்த்த ஹிப் ஹாப் ஆதி, படத்தின் வெற்றிக்கு முதுகெலும்பாய் இருந்தார். நயன்தாராவுக்கும் படத்தில் நல்ல ரோலை கொடுத்திருந்தார் மோகன் ராஜா. இப்படி தமிழ் சினிமா தூக்கி வைத்து கொண்டாடிய இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார் மோகன் ராஜா.
தனி ஒருவன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை நினைவு கூறும் வகையில், இதன் அறிவிப்பு தற்போது வீடியோவுடன் வெளியாகி உள்ளது. இரண்டாம் பாகத்தையும் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனமே தயாரிக்க, நயன்தாரா கதாநாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் பாகத்தில் இருந்த ஹிப் ஹாப் ஆதி இந்த படத்தில் இல்லை. அவருக்கு பதில் சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் மோகன் ராஜாவும், ஜெயம் ரவியும் இருக்கின்றனர். முந்தைய படத்தில் உன் எதிரி யார் என்று சொல் நீ யாரென்று சொல்கிறேன் என்ற வசனம் இடம் பெற்றிருக்கும். இதில் நீ யார் என்று சொல் உன் எதிரி யார் என்று சொல்கிறேன் என்று படத்தின் கதைக்களத்தையே மாற்றி இருக்கிறார் மோகன் ராஜா.
மேலும் ஜெயம் ரவியிடம் அவர், உன் எதிரி உன்னை தேடி வருவான் என்று கூறுவது போல் வசனத்தை வைத்துள்ளார். இதனால் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் வில்லன் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அது யார் என்று தெரியக் கூடாத அளவுக்கு, படக்குழு சஸ்பென்சாக வைத்துள்ளது. அடுத்த ஆண்டு தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.