ராஜா ராணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. முதலில் குறும்படங்கள் எடுத்திருந்த அவர், இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராகும் வாய்ப்பை பெற்றார். எந்திரன் நண்பன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த அட்லி, ராஜா ராணியில் இயக்குனராகி கோலிவுட்டில் தூள் கிளப்பினார். இனி திரைப்படங்களிலேயே நடிக்க வர மாட்டேன் என்று கூறிய நயன்தாராவுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனை கொடுக்க, அட்லியும் தனது முதல் திரைப்படத்திலேயே குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை கொடுத்தார்.
இதன்பிறகு விஜய்யுடன் கைகோர்த்த அட்லி, தெறி, மெர்சல், பிகில் என மூன்று பிளாக்பஸ்டர் ஹிட்களை கொடுத்தார். விஜய் கூட்டணியில் முதலில் வெளியாகிய தெறி திரைப்படம் மூலம் ஆக்சன் இயக்குனர் அந்தஸ்தை பெற்றார் அட்லி. ஆனால், மௌன ராகம் திரைப்படத்தின் கதைக்களத்தை வைத்துதான் அவர் ராஜா ராணி படத்தை எடுத்திருப்பதாகவும், சத்ரியன் படத்தைக் கொண்டுதான் தெறி படத்தை அவர் எடுத்துள்ளார் என்றும் பலரும் இணையத்தில் வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.
இதைத் தொடர்ந்து கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் தழுவலே, மெர்சல் என்றும் பலர் குறை கூறினர். ஆனால் இதை எல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளாத அட்லி, தான் இயக்கிய அத்தனை படங்களையும் வெற்றி படங்களாக மாற்றி தயாரிப்பாளர்கள் விரும்பும் தரமான இயக்குனராக உருவெடுத்தார். பிகில் திரைப்படத்திற்கு பிறகு, அட்லியின் அடுத்த பட அறிவிப்பு நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்தது.
இந்த சூழலில், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் பாலிவுட்டுக்குச் சென்ற இயக்குனர், அங்கு உச்ச நட்சத்திரம் ஷாருக்கானை வைத்து படம் எடுத்தார். ஜவான் எனும் பெயரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், நயன்தாரா நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி மிரட்ட இருக்கிறார். முதல் முறையாக இந்தி படத்தில் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
ஜவான் திரைப்படம் தரமாக வந்திருப்பதாக கூறப்படும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். ஜவான் திரைப்படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இசை வெளியீட்டு விழாவில் தொடர்ந்து அடுத்த நாளாக 31ஆம் தேதி ஜவான் படத்தின் டிரைலர், துபாயில் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் காலிஃபாவில் திரையிடப்படுகிறது. வரும் ஏழாம் தேதி படம் வெளியாக இருப்பதால், ஒட்டுமொத்த திரையுலகமும் படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது.