சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று வெற்றி பெற்றவர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். பாண்டிராஜ் இயக்கிய மெரினா திரைப்படத்தில், தனக்கு கிடைத்த சிறிய கதாபாத்திரத்தை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட சிவகார்த்திகேயன், அங்கிருந்து வெள்ளித்திரைக்கான தனது பயணத்தை தொடங்கினார்.
பொன்ராம் இயக்கத்தில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், போஸ் பாண்டியனாக கலக்கிய அவர், தொடர்ந்து நகைச்சுவை ஜானரில் உள்ள படங்களைத் தேடி தேடி நடித்தார். இந்த பார்முலா சிவகார்த்திகேயனுக்கு நன்றாகவே கை குடுத்தது.
தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக தனது மெருகேற்றி கொண்ட எஸ்.கே., ஆக்சன் ஹீரோவாக மாறுவதற்கு சரியான கால அவகாசத்தை எடுத்துக் கொண்டார். இடையே சிறு சிறு தோல்விகளை அவர் கண்டாலும், அதற்கு பிறகு ஒரு பெரிய வெற்றி கிடைத்ததால் தனக்கான இடத்தை பலப்படுத்திக் கொண்டார் எஸ்.கே. கடைசியாக டாக்டர், டான் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே அவருக்கு 100 கோடி ரூபாய் வசூலை கொடுத்தது.
பிறகு பிரின்ஸ் திரைப்படம் எஸ்.கே.வுக்கு படுதோல்வியை கொடுக்க, அவரது மார்க்கெட்டையும் சற்று ஆட்டிப்பார்த்தது. இந்த முறையும் இதனை சரியாக சுதாரித்துக் கொண்ட நடிகர், மண்டேலா இயக்குநருடன் கை கோர்த்து மாவீரனை கொடுத்தார். கடந்த ஜூலை மாதம் வெளியான இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. படத்துக்கு பக்கபலமாக யோகிபாபுவின் பேட்ச் ஒர்க் காமெடி அமைய, மாவீரனை மக்கள் கொண்டாடினார்.
இந்த வெற்றி கிடைத்த உற்சாகத்தில் எஸ்.கே., அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த திரைப்படம், ராணுவ பின்னணியில் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்துள்ளது. இதன்நடுவே, சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமாருடன், எஸ்.கே., கொரோனாவுக்கு முந்தைய காலத்திலேயே இணைந்தார். வேற்று கிரகத்தில் வசிப்பதாக நம்பப்படும் ஏலியன், பூமிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்ற ஒன்லைன்தான் படத்தின் கான்செப்ட். இதில் ரகுல் ப்ரித்தி சிங் கதாநாயகியாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இதற்கான வி.எஃப்.எக்ஸ் பணிகள் தொடர்ந்து தாமதமாவதால், அயலான் வெளியாவதில் சிக்கல் நீடித்து கொண்டே இருந்தது.
ஒருவழியாக தீபாவளிக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் வி.எஃப்.எக்ஸ் வேலையில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் சோர்ந்து போனாலும் படத்திற்கான பணிகளில் படக்குழு தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. தற்போது ஒரு வழியாக அயலான் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்திருக்கும் எஸ்.கே. ரசிகர்கள், படத்திற்கான டிரைலரை விரைவில் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.