இணையத்தில் எங்கு திருப்பினாலும் தற்போது ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் குரல் லியோ மட்டும் தான். படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால், அதனைப் பற்றிய பேச்சுகளே எங்கும் ஒலிக்கிறது. அதேசமயம் வழக்கமான விஜய் திரைப்படத்திற்கான பிரச்சனைகளும் இதற்கு ஆரம்பமாகிவிட்டது.
அதிகாலை நான்கு மணி காட்சி வேண்டும் என்று தமிழக அரசிடம் லியோ படக்குழு முறையிட, அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 19ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை ஐந்து காட்சிகளுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, நள்ளிரவு 1:30 மணியுடன் காட்சியை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை கண்காணிக்க மாவட்டங்கள்தோறும் குழுவையும் அரசு அமைத்தது.
இதனால் அதிருப்தியில் இருக்கும் லியோ படக்குழு, நீதிமன்றத்தை நாடியது. ஒவ்வொரு காட்சிக்கும் இடையே 40 நிமிடங்கள் இடைவெளி இருப்பதால், இரவு 1.30க்குள் படத்தை முடிக்க முடியாது என்றும், அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இது தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க சென்னையின் முக்கிய திரையரங்குகளில் இன்னும் முன்பதிவும் தொடங்கவில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கேரளாவில் விஜய்க்கு அதிகளவு ரசிகர்கள் இருப்பதால், அங்கு கொண்டாட்டம் களைகட்டி உள்ளது.
விஜய் கட் அவுட்டுக்கு அபிஷேகம் செய்தும், சாலையில் பேரணியாக சென்றும் ரசிகர்கள் குதூகலத்தில் ஈடுபட்டனர். இத்தனை பிரச்சனைகள் சுற்றி இருந்தாலும், லியோ படத்தில் அப்படி என்ன வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். விக்ரம் படத்தில் இறுதி காட்சியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா வந்ததைப் போல இதிலும் ஒரு பிரபலம் வரலாம் என்று கூறப்படுகிறது.
அது நிச்சயம் ராம்சரணாகத்தான் இருக்கும் என பலர் கூறி வந்த நிலையில், தற்போது தனுஷ் அந்த பாத்திரத்தில் நடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பேட்டி அளித்திருக்கும் சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா, லியோவின் தனுஷ் இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் ஆக படக்குழு வைத்திருக்க, 19ஆம் தேதி தெரிந்து விடும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.