இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த தளபதி விஜயின் லியோ திரைப்படம் நாளை வெளியாகிறது. படம் ஆரம்பத்திலிருந்து இதற்கு இருந்த எதிர்பார்ப்பு, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்க, அதற்கான நாளும் தற்போது வந்து விட்டது. இதில் தளபதி விஜய் உடன், திரிஷா, சஞ்சய்தத், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இதற்கான பிரச்சனையும் ஆரம்பித்து விட்டது. தமிழ்நாடு அரசு அதிகாலைக் காட்சிக்கு அனுமதி மறுக்க, காலை 9 மணியிலிருந்து இரவு 1 30 வரை காட்சிகளை திரையிட்டு கொள்ளலாம் என்று கூறியது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தயாரிப்பு நிறுவனம், நீதிமன்றத்தின் படிகளில் ஏறியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதிகாலைக் காட்சிக்கான அனுமதியை வழங்க முடியாது என்று உறுதிப்படுத்தியது. வேண்டுமென்றால் 7 மணி காட்சிக்கு தமிழக அரசை முறையிடலாம் என்று கூறியது. ஆனால் கடைசி நேரத்தில் அதுவும் கிடைக்காததால் தற்போது ஒன்பது மணி காட்சி தான் திரையிடப்பட இருக்கிறது.
இதுபோக சென்னையில் திரையரங்கு உரிமையாளர்களிடம் ஏற்பட்ட ஒப்பந்த விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் கடைசி வரை முன்பதிவு நடைபெறாமல் இருந்தது. தற்போது அந்தப் பிரச்சனையும் சமூகமாக தீர்ந்துள்ளது. இதனிடையே லியோ படத்தில் அத்தனை நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், லோகேஷ் கனகராஜ் ஒருவர் தான் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தனி ஒருவனாய் லியோவை விளம்பரப்படுத்திய அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது லோகேஷ் கனகராஜ் பேசுகையில்,
லியோவில் இடம் பெற்ற ஆபாச வார்த்தை படத்தில் இருக்காது. அந்த வார்த்தை படத்தில் மியூட் செய்யப்பட்டு விட்டது. போதைப் பொருள் சமூகம் வேண்டாம் என்று தான் படத்தில் காட்டுகிறேன். எனக்கு அஜித் சார் வைத்து படம் இயக்க ஆசை. ரஜினியை வைத்து நான் இயக்கம் படத்தில் மல்டி ஸ்டார்கள் இடம் பெறலாம். நிச்சயம் விஜய் சார் கூப்பிட்டால் மீண்டும் படம் பண்ணுவேன். லியோ படத்தின் டிக்கெட்டை கூடுதல் விலைக்கு ரசிகர்கள் வாங்கி பார்க்காதீர்கள் என்று தெரிவித்தார்.