வாரிசு திரைப்படத்தைத் தொடர்ந்து, இந்த ஆண்டிலேயே விஜய்யின் அடுத்த படமான லியோவும் வெளியாகி இருக்கிறது. மாஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக இணைய, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. கதைப்படி, விஜய் பார்த்திபன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இமாச்சலபிரதேசம் அருகே தியோக் பகுதியில், தனது மனைவி, மகன், மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார் பார்த்திபன்.
விலங்குகளை மீட்பவராக செயல்பட்டு அவர், அங்கேயே காபி ஷாப் நடத்தி வருகிறார். இப்படி இருக்க ஒரு நாள் இரவு கொள்ளை கும்பல் அவரது காபி ஷாப்பிற்குள் புகுந்து, விஜய்யின் மகளை கொலை செய்ய முயற்சிக்கிறது. உடனே தன்னை அறியாமல் கொள்ளை கும்பலின் துப்பாக்கியை எடுத்து மொத்த பேரையும் சுட்டு வீழ்த்துகிறார் பார்த்திபன். இதற்காக அவர் சிறைக்கு செல்ல, வழக்கில் அவர் நிபராதி என தீர்ப்பளிக்கும் நீதிமன்றம், அவருக்கு விருது வழங்கவும் பரிந்துரைக்கிறது. பார்த்திபனின் புகைப்படம் இந்தியா முழுவதும் வைரலாக, அதனை பல்வேறு பகுதிகளிலும் பார்க்கும் ரவுடி கும்பல், ஆலை தீ விபத்தில் மரணமடைந்த லியோதான் இந்த பார்த்திபன் எனக்கூறி தேடி வருகிறது.
இதன்பிறகு என்ன நடந்தது, பார்த்திபன்தான் உண்மையான லியோவா இல்லை குடும்பத்திற்காக இப்படி நடிக்கிறாரா என்பதை முடிந்த அளவுக்கு சுவாரஸியமாக சொல்லியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்திருப்பதால் முதல் நாளில் மட்டும் 148.5 கோடி ரூபாய் வசூல் அள்ளியது. இருப்பினும் வெள்ளிக்கிழமை வேலைநாள் என்பதால் லியோவிற்கு வசூல், முதல் நாளை ஒப்பிடுகையில் பாதியாக குறைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே படத்தில் லியோவிற்கான பிளாஷ்பேக் காட்சிகள் சரியில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கதைப்படி, போலீஸ் அதிகாரியான கவுதம் மேனன், சிறையில் இருக்கும் மன்சூர் அலிகானிடம் கேட்கும்போதுதான், பிளாஷ்பேக் குறித்த காட்சிகள் ஓபன் ஆகும். இந்த நிலையில் லியோ படத்தின் ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்சா, அந்த பிளாஷ்பேக் காட்சிகள் பொய்யாக கூட இருக்கலாம் என்று கூறி குட்டையை கிளறியிருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், இந்த படத்திற்கு பிளாஷ்பேக் காட்சி தேவையில்லை என்றுதான் நினைத்தோம். முதலில் பிளாஷ்பேக் காட்சி வைப்பதற்கு, லோகேஷ் கனகராஜிடமே ஐடியா இல்லை. மன்சூர் அலிகான் அதனை எடுத்து கூறுவது பொய்யாக கூட இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு வேளை மனோஜ் பரமஹம்சா கூறியிருப்பதை போல படத்தில் வேறொரு பிளாஷ்பேக் காட்சி கூட இருக்கலாம். அதனை லியோ படத்தின் இரண்டாம் பாகத்தில் லோகேஷ் விளக்க திட்டமிட்டிருக்கலாம் என்றும் சிலர் இங்கு கூறி வருகின்றனர். அதேசமயம், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை தேவையில்லாமல் பில்டப் -அப் செய்ய வேண்டாம் என்றும் விஜய் ரசிகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.