இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ஜப்பான். இந்தப் படத்தில் அனு இம்மானுவேல், விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் கார்த்தியின் 25வது படமாக அமைந்துள்ளது. இதனால் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சிறுத்தை சிவா, சுராஜ், பா.இரஞ்சித், அ.வினோத், நடிகர் சூர்யா, நடிகர் ஜெயம் ரவி, விஷால், நடிகை தமன்னா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கார்த்தியுடன் பணியாற்றிய ஏராளமான கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகை தமன்னா பேசும் போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று 75 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டேன். ஆனால் இப்போது எங்கு சென்றாலும் ரசிகர்கள் பையா படத்தை பற்றி தான் கேட்பார்கள். கார்த்தியுடன் இணைந்து 3 படங்களில் நடித்துள்ளேன். பையா, சிறுத்தை மற்றும் தோழா படங்கள் என்று அனைத்துமே பெரிய ஹிட். வரும் காலங்களில் இன்னும் நடிப்பேன் என்று நினைக்கிறேன்.
பையா படத்தின் படப்பிடிப்பின் போது கார்த்தி தான் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார். பையா படத்தை மறக்க முடியாத படமாக அமைத்து கொடுத்த கார்த்திக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். கார்த்தியின் சினிமா வாழ்க்கையை தொடக்கம் முதலே கவனித்து வருகிறேன். அவருக்கு எப்போதும் மக்களை எண்டெர்ரெய்ன் செய்வது மட்டுமே முதன்மை நோக்கமாக இருந்துள்ளதாக தெரிவித்தார்.
இதன்பின் தமன்னாவுடன் கார்த்தியும் மேடைக்கு வந்த போது, பையா படத்தின் ”அடடா மழை” பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது இருவரும் இணைந்து நடனமாட, நேரு ஸ்டேடியமே அதிர்ந்தது. அந்த அளவிற்கு ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினார்கள். நடிகை தமன்னா முதல்முறையாக தான் நடிக்காத படத்தின் விழாவில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.