”இன்று, நேற்று, நாளை” என்று படத்தின் மூலமாக தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ரவிக்குமார். விஷ்ணு விஷால், கருணாகரன் ஆகியோர் டைம் மிஷின் வைத்து செய்த ரகளையும், அதன் மூலமாக ஏற்பட்ட பிரச்சனைகளையும் வைத்து உருவான இந்த படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்திற்கு பின் இயக்குநர் ரவிக்குமார் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் படத்தை தொடங்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பி 50 சதவிகிதம் முடிவடைந்த பின் மொத்த பட்ஜெட்டும் முடிந்தது. இதனால் அயலான் படத்தின் ஷூட்டிங் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாகிய நிலையில், அயலான் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகியது.
அயலான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அயலான் படம் பற்றி இயக்குநர் ரவிக்குமார் பேட்டியளித்துள்ளார். அதில், அயலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு 95 நாட்கள் தான் நடைபெற்றது. நிதி பிரச்சனை காரணமாக தான் படம் தாமதமானது.
தற்போது நிதி பிரச்சனைகள் முடிவடைந்து கிராஃபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. அயலான் படத்தின் தாமதத்தால், நானும் சிவகார்த்திகேயனும் இணைந்து இடையிலேயே ஒரு படம் செய்யலாம் என்று முடிவெடுத்தோம். ஆனால் அயலான் வெளியான பின் மீண்டும் இணையலாம் என்று இருவரும் உறுதியாக இருந்தோம்.
அயலான் படத்திற்கு பின் மீண்டும் சிவகார்த்திகேயன் படம் இயக்குகிறேன். இதற்காக பல கதைகளை பேசி வருகிறோம். அதேபோல் ட்ரீம் வாரியர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக சூர்யாவுக்காக ஒரு கதை எழுதினேன். அந்த கதை சூர்யாவிடம் சொல்லப்பட்டுள்ளது. நேரம் வரும் போது முறையாக அந்த படம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.