பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து இயக்குநர் மணி ரத்னம் நடிகர் கமல்ஹாசனுடன் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைவுள்ளார். இந்த அறிவிப்பு வெளியாகி நீண்ட மாதங்களான நிலையில், படத்தின் திரைக்கதை பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் திரைக்கதை பணிகள் முடிவடைந்து படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிய வந்தது. அதற்காக ப்ரோமோ வீடியோக்களும் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டு வந்தன.
இந்த நிலையில் கமல்ஹாசன் – மணி ரத்னம் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் இணைந்துள்ளதாக காலையில் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இவர், மணி ரத்னத்தின் ஓகே கண்மணி படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே மன்மதன் அம்பு மற்றும் தூங்காவனம் படத்தில் நடிகை த்ரிஷா கமல்ஹாசனுடன் பணியாற்றியுள்ளார். அதேபோல் மணி ரத்னத்துடன் ஆயுத எழுத்து மற்றும் பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் மீண்டும் இணைந்துள்ளார். இந்த நிலையில் ஆச்சரியமளிக்கும் வகையில் நடிகர் ஜெயம் ரவியும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் நீண்ட தலைமுடியுடன் அதிரடியாக சண்டையிடுகிறார். அதன்பின் இறுதியாக தனது பெயர் ”ரங்கராய சக்திவேல் நாயக்கன்” என்று கூறுகிறார். ஏற்கனவே நாயகன் படத்தில் கமல்ஹாசன் சக்திவேல் நாயக்கர் கதாபாத்திரத்தில் நடித்தார். இதன்பின் படத்தின் தலைப்பாக ”Thug Life” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.