2023ஆம் ஆண்டு முடிவடைந்த இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், டிசம்பர் மாதத்தில் ஷாரூக் கானின் டங்கி மற்றும் பிரபாஸின் சலார் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவுள்ளது. அதேபோல் தமிழ் படங்களில் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் படம் மட்டுமே பெரிய படங்களில் ஒன்றாக உள்ளது. ஏற்கனவே டிசம்பர் 15ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட கேப்டன் மில்லர் பொங்கலுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஏராளமான பெரிய படங்கள் ரிலீஸிற்கு தயாராக உள்ளது. ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள லால் சலாம் படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனுஷின் கேப்டன் மில்லர் படமும் பொங்கலுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக உருவாகி வரும் அயலான் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய படங்கள் அடுத்தடுத்து வரிசை கட்டியதால் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் ஜனவரி 26க்கு சோலோ ரிலீஸாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பொங்கல் ரேசில் மற்றொரு முக்கியமான படம் இணைந்துள்ளது. அந்தாதூன் படத்தின் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கும் சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.