சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இயக்குநர் பா.இரஞ்சித் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். கேஜிஎஃப் பின்னணியை கொண்ட கதைக்களத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு 118 நாட்கள் நடைபெற்ற நிலையில், தற்போது விஎஃப்எக்ஸ் மற்றும் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகிய நிலையில், ரசிகர்களை வியக்க வைத்தது. இளம் விக்ரம் மற்றும் முதுமையடைந்த கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார்.
தங்கத்தை கைப்பற்றும் போட்டிக்கு இடையில் மக்களின் அல்லல்கள் மற்றும் போர் ஆகியவை காட்சிப்படுத்தவுள்ளது. இந்த படத்தின் 10க்கும் அதிகமான மொழிகளில் வெளியிட ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் முயற்சித்து வருகிறது. அதேபோல் தங்கலான் படம் உலகளவில் பெரிதாக பேசப்படும் என்றும் தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும் போது, அண்மையில் பாலிவுட்டின் நம்பர் 1 ஹீரோ ஒருவரை சந்தித்தேன். அப்போது அவருடன் பேசி கொண்டிருக்கும் போது பேச்சு சினிமா பக்கம் திரும்பியது. எங்கள் நிறுவனமும், அந்த நடிகரின் நிறுவனமும் இணைந்து படமெடுக்க ஆலோசித்து வருகிறோம்.
அப்போது அந்த நடிகரிடம் தங்கலான் படத்தின் டீசர் காட்சிகளை காண்பித்தேன். அவர் உடனடியாக பா.இரஞ்சித்தை சந்திக்க விரும்பினார். அவரின் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தார். விரைவில் பா.இரஞ்சித் பாலிவுட் படமொன்றை இயக்குவார். அந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.