பாலிவுட்டில் வித்தியாசமான படங்களை இயக்கி வரும் அனுராக் காஷ்யப்பிற்கு படைப்புகளுக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு இருக்கும். அவர் இயக்கத்தில் வெளியான தேவ்-டி, கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர் 1 மற்றும் கேங்ஸ் ஆஃப் வாசேப்பூ 2, மன்மர்ஷியான், பிளாக் பிரைடே உள்ளிட்ட படங்கள் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் தமிழ் இயக்குநர்களில் பாலா இயக்கிய சேது, அமீர் இயக்கிய பருத்திவீரன், சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களை சர்வதேச தளத்தில் தொடர்ந்து பேசி வருபவர் அனுராக் காஷ்யப். அதேபோல் தென்னிந்தியாவில் இருந்து வரும் அத்தனை படங்களையும் பார்க்க பழக்கம் கொண்டவர். அதேபோல் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்டோருடன் நெருங்கில் நட்பில் உள்ளவர்.
அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் ஒரேயொரு காட்சியில் மட்டும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தமிழில் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படத்தில் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். இந்த நிலையில் அடுத்தடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர், திடீரென தமிழில் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். அவரை ஹீரோவாகா வைத்து அனுராக் காஷ்யப் தமிழில் தனது முதல் படத்தை இயக்கவுள்ளது தெரிய வந்துள்ளது. இதனை ஜிவி பிரகாஷ் குமார் உறுதி செய்துள்ளார். இந்த படம் பான் இந்தியா படமாகவும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் மொழி தெரியாமல் தமிழ் அனுராக் காஷ்யப் படம் இயக்கவுள்ளது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இந்த படத்திற்கான கதையை தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.