பிரின்ஸ் படத்தின் படுதோல்விக்கு பின் நடிகர் சிவகார்த்திகேயன் பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்று மாவீரன் படத்தில் நடித்து முடித்தார். சிவகார்த்திகேயன் எதிர்பார்த்ததை போலவே மாவீரன் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் சிவகார்த்திகேயனின் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.
மாவீரன் திரைப்படம் ரூ.100 கோடி அளவிற்கு வசூல் செய்யப்படவில்லை என்றாலும், ரூ.80 கோடி வசூலித்து தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபகரமான படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பின் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ஆர்கேஎஃப்ஐ நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். அதேபோல் வில்லனாக ராகுல் போஸ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ராணுவ வீரனாக நடிக்கும் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்திற்கு பின் நன்றாக உடல் எடையை அதிகரித்து, வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இதனிடையே சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு தந்தையாக நடிப்பதாக தெரிய வந்தது. இந்த படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதற்காக சிவகார்த்திகேயன் உடல் எடையை குறைத்துள்ளார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டான் படத்தின் போது உடல் எடையை கொஞ்சம் குறைத்திருந்த சிவகார்த்திகேயன், இப்போது பள்ளி மாணவனை போல் உடலை மாற்றியுள்ளார். இதனை ரசிகர்களுக்கு கூறும் வகையில் இன்ஸ்டாகிராமில் 2 புகைப்படங்களை வெளியிட்டு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உடல் எடையை ஏற்றி குறைத்து சிவகார்த்திகேயன் நடித்து வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.