இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் தனுஷ், நடிகை பிரியங்கா மோகன், நடிகர் சந்தீப் கிஷன், சிவராஜ் குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் அண்மையில் மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்பின் நடிகர் தனுஷ் பேசும் போது, சிறுதுளி பெருவெள்ளம்னு சொல்லுவாங்க.. 2002ல் இருந்து நான் சேர்த்த சிறுதுளிகள் எல்லாரும் இன்று வெள்ளம் போல் வந்துள்ளார்கள். கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்.. இந்த படத்தை பற்றி சிந்தித்தால் ஒன்று தான் நினைவுக்கு வருகிறது.
அதுதான் உழைப்பு.. ஒரு அசுரதனமான உழைப்பு இந்த படத்தில் இருக்கிறது. அருண் மாதேஸ்வரனை பார்க்கும் போது எனக்கு வெற்றிமாறனின் நியாபகம் தான் வருகிறது. ஏனென்றால் முதல்முறையாக அவரை பார்க்கும் போது, இந்த தம்பியா.. அப்படினு தான் கதை கேட்டேன். ஒரு 15 நிமிஷம் சொன்னாரு.. பெரிய பட்ஜெட்டா இருக்கே.. பண்ணிட முடியுமானு கேட்டேன்..
எல்லாவற்றுக்கும் ம்ம்.. அப்படியே பண்ணிரலாம் சார்னு தான் சொல்வாரு..இப்போது நான் படம் பார்த்தேன். அவர் சொன்னதை போல் தான் படமும் இருக்கு.. இது சம்பவம் செய்யும் கை-னு நல்லாவே தெரிஞ்சு போச்சு.. அதேபோல் வடசென்னை 2 படம் பற்றி பலரும் கேட்கிறீர்கள். அந்த படம் நிச்சயம் நடக்கும். ஏனென்றால் ரசிகர்கள் ஆவலாக இருக்கும் போது நாங்கள் நிச்சயம் மிஸ் செய்ய மாட்டோம் என்று தெரிவித்தார்.
இதன்பின்னர் விஜய்காந்த் நடிப்பில் உருவாகிய வைதேகி காத்திருந்தால் படத்தில் வரும் ”ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு” பாடலை பாடிய தனுஷ் அதனை மாற்றி விஜயகாந்திற்கு அர்ப்பணிக்கும் வகையில் ராசாவே உன்னை காணாத நெஞ்சு காத்தாடி போல் ஆடுது என்று பாடியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.