தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தனுஷின் சினிமா வாழ்க்கையில் பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் இதுதான்.
இத்தனை எதிர்பார்ப்புகளுடன் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம். படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லரிலேயே கேப்டன் மில்லர் படம் ஒரு போராளிகளின் படம் என்பது உறுதியாகிவிட்டது. அதற்கேற்றபடி நடிகர் தனுஷின் அறிமுக காட்சியே அட்டகாசம் செய்துள்ளார். சங்கை ஊதி கொண்டு அறிமுகமாகும் காட்சியில் ஜிவி பிரகாஷ் அமைத்துள்ள பிஜிஎம் தெறி.
அதன்பின் ஒவ்வொரு கதாபாத்திரமாக அறிமுகமாகும் காட்சிகள், அதன்பின்னான கொள்ளைக்கு தயாராகும் தனுஷின் படை என்று ஒரு பெரிய டிராமாவுக்கான களம் உருவாகுவதை மிகச்சிறப்பாக திரைக்கதையாக அமைத்துள்ளார் அருண் மாதேஸ்வரன். கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும், நடிகர் தனுஷ் வரும் ஒவ்வொரு காட்சியும் அட்டகாசம்.
மாஸாக வரும் தனுஷ், ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பின் அசுரனாக மிரட்டுகிறார். அதன்பின் இடைவேளை காட்சியில் ஒட்டுமொத்த திரையரங்கும் பட்டாசு தான். தனுஷ், சிவராஜ் குமார் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் சேரும் அந்த காட்சி பக்கா வெறி மொமண்டாக அமைந்துள்ளது. பிரிட்டிஷ் படையில் உள்ள தனுஷ் எப்படி போராளியாக மாறுகிறார் என்பது மிகச்சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.
அதேபோல் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் போது பிரிட்டிஷ் படையால் மக்கள் எப்படி கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின் வரும் கிளைமேக்ஸ் காட்சிகளில் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு துப்பாக்கி சண்டை என்பது தான் மையம். அந்த துப்பாக்கியை எடுத்து மொத்த படையையும் எதிர்த்து தனுஷ் நிற்கும் காட்சியை பார்ப்பதே மிரட்டல் தான்.
நிச்சயம் தனுஷின் நடிப்பதற்காக இன்னொரு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தனுஷிற்கு 2 லுக்களில் மிரட்டியுள்ளார். திரைக்கதை நிதானமாக பயணித்தாலும் ஆங்காங்கே வரும் மாஸ் காட்சிகளும், போராடுவதற்கான தேவையாக சுதந்திரத்தை கூறியதும் படத்தை நன்றாக காப்பாற்றியுள்ளது. இதனால் கேப்டன் மில்லர் பொங்கலுக்கு சொல்லி அடிக்கும் என்று அடித்து சொல்லலாம்.